T20 WC 2024: பரபரப்பான ஆட்டத்தில் அயர்லாந்திடம் போராடி வென்றது பாகிஸ்தான்!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்திருந்த பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணியும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற முடியாமல் லீக் சுற்றுடனே தொடரிலிருந்து வெளியேறியுள்ளன. இந்நிலையில் இன்று நடைபெறும் 36ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஃபுளோரிடாவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் மற்றும் ஆண்ட்ரூ பால்பிர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் முதல் ஓவரை ஷாஹீன் அஃபிரிடி வீச, அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் பால்பிர்னியும், ஐந்தாவது பந்தில் லோர்கன் டக்கரும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பால் ஸ்டிர்லிங் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் களமிறங்கிய ஹாரி டெக்டர், கர்டிஸ் காம்பேர் மற்றும் ஜார்ஜ் டக்ரேல் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினார்.
இதன் காரணமாக அயர்லாந்து அணி 32 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின் இணைந்த கரேத் டெலானி மற்றும் மார்க் அதிர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். அதிலும் குறிப்பாக கரேத் டெலானி சிக்ஸர்களை விளாசி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை மிரளவைத்தார். இப்போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த கரேத் டெலானி அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 31 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதன்பின் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மார்க் அதிரும் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களாலும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினார். இறுதியில் ஜோஷுவா லிட்டில் 21 ரன்களைச் சேர்க்க, அயர்லாந்து அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷாஹீன் அஃப்ரிடி மற்றும் இமாத் வசீம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், முகமது அமீர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான் மற்றும் சைம் அயூப் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய சைம் அயூப் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 17 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான முகமது ரிஸ்வானும் 17 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலுயன் திரும்பினர். அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பாபர் ஆசாம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லும் முயற்சியில் இறங்கினார்.
ஆனால் அதேசமயம் மறுபக்கம் களமிரங்கிய ஃபகர் ஸமான் 5 ரன்களுக்கும், உஸ்மான் கான் 2 ரன்களுக்கும், ஷதாப் கான் ரன்கள் ஏதுமின்றியும், இமாத் வசிம் 4 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் பாகிஸ்தான் அணி 62 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் பாபர் ஆசாமுடன் இணைந்த அப்பாஸ் அஃப்ரிடி தனது பங்கிற்கு ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என விளாசியதுடன் 17 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய ஷாஹீன் அஃப்ரிடியும் இரண்டு சிக்ஸர்களை விளாசி அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் பாபர் அசாம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 2 பவுண்டரிகளுடன் 32 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணியானது 18.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இருப்பினும் நடப்பு ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுடன் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.