T20 WC 2024: ஆஃப்கானை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி விண்டீஸ் அபார வெற்றி!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. இந்நிலையில் இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் மற்றும் ஜான்சன் சார்லஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிராண்டன் கிங் 7 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த ஜான்சன் சார்லஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், 8 பவுண்டரிகளுடன் 43 ரன்களைச் சேர்த்திருந்த ஜான்சன் சார்லஸ் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிக்கோலஸ் பூரன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருக்கு துணையாக விளையாடிய ஷாய் ஹோப் 2 சிக்ஸர்களுடன் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ரோவ்மன் பாவெலும் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 26 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மறுமுனையில் தனது அதிரடியை நிறுத்தாத நிக்கோலஸ் பூரன் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன், 200 ரன்களை எட்டவும் உதவியாக இருந்தார்.
அதன்பின் இப்போட்டியில் நிக்கோலஸ் பூரன் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 6 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 98 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் 218 ரன்களைக் குவித்து அசத்தியுள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் குல்பதீன் நைப் 2 விக்கெட்டுகளையும், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் அணியின் அதிரடி தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் முதல் ஓவரிலேயே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த இப்ராஹிம் ஸத்ரான் - குல்பதின் நைப் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அதிரடியாக விளையாடி வந்த இப்ராஹிம் ஸத்ரான் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 38 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நஜிபுல்லா ஸத்ரான் ரன்கள் ஏதுமின்றியும், முகமது நபி ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்மதுல்லா ஒமர்ஸாயும் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதனைத்தொடர்ந்து கரிம் ஜானத் 14 ரன்களுக்கும், நூர் அஹ்மத் 2 ரன்களுக்கும், நவீன் உல் ஹக் 4 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இறுதியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ரஷித் கானும் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 18 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணியானது 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஒபேத் மெக்காய் 3 விக்கெட்டுகளையும், குடகேஷ் மோட்டி மற்றும் அகீல் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி இதுவரை தோல்வியையே சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.