இந்திய அணிக்கு 30 சதவீத வாய்ப்பு மட்டுமே உள்ளது - கபில் தேவ்!

Updated: Wed, Oct 19 2022 22:10 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007-க்குப்பின் 15 வருடங்களாக 2ஆவது கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து சாம்பியன் பட்டம் வெல்ல ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக கடந்த டி20 உலக கோப்பையில் விராட் கோலி தலைமையில் பரம எதிரி பாகிஸ்தானிடம் முதல் முறையாக அவமான தோல்வியை சந்தித்து லீக் சுற்றுடன் இந்தியா வெளியேறியது. 

அதன்பின் கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் தலைமையில் பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களையும் வென்று தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறிய இந்தியா சமீபத்தில் 6 அணிகள் பங்கேற்ற மினி உலகக் கோப்பை போன்ற ஆசிய கோப்பையில் தோற்றது. அதிலும் சூப்பர் 4 சுற்றில் சொதப்பி பைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறிய இந்தியா அழுத்தமான முக்கிய போட்டிகளில் சொதப்புவதில் நாங்கள் கொஞ்சமும் முன்னேறவில்லை என்று மீண்டும் நிரூபித்தது. 

அதைவிட கடைசி நேரத்தில் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் வெளியேறியது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அவரை தவிர்த்து இடம் பெற்றுள்ள புவனேஸ்வர் குமார் போன்றவர்கள் வேகத்துக்கு கை கொடுக்கக் கூடிய ஆஸ்திரேலியாவில் 130+ கி.மீ வேகத்தில் வீசும் மித வேகப்பந்து வீச்சாளர்கள் என்பதுடன் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்குபவர்களாக உள்ளனர்.

இதனால் இம்முறையும் கோப்பையை வெல்வது கடினம் என்று ரசிகர்கள் கவலையடைந்தாலும் தரமான வீரர்களை கொண்ட இந்தியா நிச்சயமாக அரையிறுதிக்கு செல்லும் என்று சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான்கள் கணித்துள்ளனர். ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமெனில் அரையிறுதிக்கு போகும் 4 அணிகளில் ஒன்றாக இந்தியா இருப்பதற்கு வெறும் 30% மட்டுமே வாய்ப்புள்ளதாக முன்னாள் ஜாம்பவான் கேப்டன் கபில் தேவ் கணித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர்,“உலகக் கோப்பை மட்டுமல்லாது அனைத்து தொடர்களிலும் வெற்றியை பெற்றுத்தரக்கூடிய நிறைய ஆல்-ரவுண்டர்கள் கொண்டிருப்பதைத் தவிர வேறு என்ன வேண்டும்? ஹர்திக் பாண்டியா போன்ற ஒருவர் இந்தியாவுக்கு மிகவும் பயனுள்ளவராக இருப்பார். எந்த ஒரு அணியிலும் ஆல்-ரவுண்டர்கள் அணியின் வெற்றிக்கான சாவியாக இருந்து பலத்தை சேர்ப்பார்கள். பாண்டியா போன்ற ஆல்-ரவுண்டர்கள் 6ஆவது பந்து வீச்சாளராக பயன்படுத்தும் வாய்ப்பை ரோஹித் சர்மாவுக்கு கொடுப்பார்கள். 

அவர் நல்ல பேட்ஸ்மேன், பவுலர் மற்றும் ஃபீல்டர். ஜடேஜாவும் இந்தியாவின் கச்சிதமான ஆல்-ரவுண்டர். எங்களுடைய காலத்திலும் இந்திய அணியில் நிறைய ஆல்-ரவுண்டர்களைக் கொண்டிருந்தோம். மேலும் டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் வெல்லும் அணி அடுத்த போட்டியில் தோற்கலாம். அந்த வகையில் இம்முறை உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு கடினமான வாய்ப்புகளே உள்ளது.

அதிலும் டாப் 4 அணிகளில் ஒன்றாக இந்தியா இருப்பதில் நிறைய பிரச்சனைகள் உள்ளது. அதனால் அவர்கள் டாப் 4 அணிகளில் ஒன்றாக இருப்பார்களா என்ற கவலை எனக்குள்ளது. யார் என்ன சொன்னாலும் என்னைப் பொறுத்த வரை டாப் 4 அணிகளில் ஒன்றாக இந்தியா இருப்பதற்கு 30% மட்டுமே வாய்ப்புள்ளது. மேலும் காயமடைந்த ஜஸ்பிரித் பும்ரா மிகச்சிறந்த பவுலர் என்றாலும் அவரை எந்த அளவுக்கு ரோகித் சர்மா பயன்படுத்தினார் என்பதே இந்த உலகக் கோப்பையில் அவர் இல்லாத தாக்கத்தை ஏற்படுத்தும். இப்போதெல்லாம் அவரைப்போன்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கு காயங்கள் மிகப்பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது.

இருப்பினும் பேட்டிங்கில் சூரியகுமார் போன்றவர் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று யாருமே ஆரம்பத்தில் நினைக்கவில்லை. அந்தளவுக்கு உலகமே தன்னை பேசுமளவுக்கு அவர் அபாரமாக செயல்பட்டு வருகிறார். இப்போது அவர் இல்லாமல் இந்தியா இல்லை என்றாகி விட்டது. விராட், ரோகித், ராகுல், ஆகியோருடன் அவரும் இருப்பது நம்முடைய பேட்டிங் வரிசையை பலப்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை