டி20 உலகக்கோப்பை: விராட் கோலி மீண்டும் அரைசதம்; சூர்யகுமார் யாதவ் காட்டடி!
டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அரையிறுதிக்கான 4 அணிகளை முடிவு செய்யும் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடந்துவருகின்றன. க்ரூப் 2-ல் இடம்பெற்றுள்ள இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அபாரமாக விளையாடி த்ரில் வெற்றி பெற்றது.
இன்று நெதர்லாந்தை எதிர்கொண்டு ஆடுகிறது இந்தியா. இதே க்ரூப் 2இல் இடம்பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் அணிகளுக்கு இடையே இன்று சிட்னியில் நடந்த போட்டியில் 104 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.
அதே ஆடுகளத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியும் நடப்பதால் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, பெரிய ஸ்கோரை அடிக்கும் முனைப்பில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் கேல் ராகுல் 9 ரன்களில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ரோஹித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் கடந்த கையோடு 53 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். ஆனாலும் மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் அரைசதம் கடந்து அசத்தினார்.
அவருக்கு துணையாக களமிறங்கிய சூர்யகுமார் யாதவும் தனது பங்கிற்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். இறுதியில் அவரும் 25 பந்துகளில் தனது முதல் டி20 உலகக்கோப்பை சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 62 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 51 ரன்களையும் சேர்த்தனர்.