டி20 உலகக்கோப்பை: ஓடவுட் போராட்டம் வீண்; சூப்பர் 12க்கு முன்னேறியது இலங்கை!
டி20 உலகக்கோப்பை தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்றில் நுழைவதற்காக தரவரிசையில் கடைசி எட்டு இடங்களில் இருக்கும் அணிகள் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெறும் 9ஆவது போட்டியில் இலங்கை - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இதையடுத்து இலங்கை அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய பதும் நிசாங்கா 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான குசல் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 44 பந்துகளில் 79 ரன்கள் (5 சிக்சர்கள், 5 பவண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்தார்.
தனஞ்செயா டி சில்வா ரன் எதுவும் எடுக்கவில்லை. தொடர்ந்து களமிறங்கிய சரித் அசலங்கா 31 ரன்களும் பனுகா ராஜபக்ச 19 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து இலக்கை துரத்திய நெதர்லாந்து அணியில் விக்ரம்ஜித் சிங் 7, பாஸ் டி லீட் 14, ஆக்கர்மேன் 0, டாம் கூப்பர் 16, ஸ்காட் எட்வர்ஸ் 21 என நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
ஆனாலும் மறுமுனையில் இறுதிவரை போராடிய மேக்ஸ் ஓடவுட் அரைசதம் கடந்ததுடன், இறிதிவரை களத்திலிருந்து அணியின் வெற்றிக்காக போராடினார். இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மேக்ஸ் ஓடவுட் 71 ரன்களுடன் களத்தில் இருந்தார். இலங்கை தரப்பில் வநிந்து ஹசரங்கா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியதுடன், சூப்பர் 12 சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதிசெய்தது.