டி20 உலகக்கோப்பை: சரித்திர சாதனையை நிகழ்த்திய விராட் கோலி!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. அடிலெய்டில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் ஏற்கனவே பாகிஸ்தான் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்திலும், நெதர்லாந்து அணியை 56 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்திய இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவுடனான போட்டியில் தோல்வியைத் தழுவியது.
இந்திய அணியின் இந்த தொடர் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பவர் விராட் கோலி தான். ஆசிய கோப்பையில் அவர் ஆடத்தொடங்கிய ருத்ர தாண்டவம் இன்னும் நிற்கவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக 82, நெதர்லாந்துடன் 62 என இரண்டே இன்னிங்ஸ்களில் 144 ரன்களை அடித்துள்ளார். ஆனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் அப்போட்டியில் தவறவிட்ட மாபெரும் உலக சாதனையை அவர் இப்போட்டியில் நிறைவு செய்துள்ளார்.
இந்நிலையில் இன்றைய போட்டியில் மிகப்பெரிய சாதனையை கோலி படைத்துள்ளார். அதாவது டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் இலங்கையின் மஹிலா ஜெயவர்தனே தான் முதலிடத்தில் இருந்தார். அவர் 31 போட்டிகளில் அவர் 1016 ரன்களை அடித்துள்ளார். 1000 ரன்களை கடந்த ஒரே ஒரு வீரரும் அவரே ஆகும்.
இந்நிலையில் விராட் கோலி தற்போது 25* போட்டிகளில் 1017* ரன்களை அடித்து டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையப் படைத்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக இந்த சாதனையை யாருமே நெருங்க முடியாமல் இருந்த இந்த சாதனையை தற்போது விராட் கோலி முறியடித்துள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் விராட் கோலி தான் நம்பர் ஒன் ஆக உள்ளார். அவர் 111 போட்டிகளில் 3,868 ரன்களை குவித்துள்ளார். இவரை தொடர்ந்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா 144 போட்டிகளில் 3,809 ரன்களுடன் 2ஆவது இடத்தில் நீடித்து வருகிறார். டி20 உலகக்கோப்பை தொடரில் 921 ரன்களை அடித்துள்ள ரோஹித் சர்மாவும் இதே தொடரில் 1000 ரன்களை கடப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.