T20 WC 2024: மழையால் கைவிடப்பட்ட இங்கிலாந்து-ஸ்காட்லாந்து போட்டி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது பதிப்பு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து ஸ்காட்லாந்து அணி பலப்பரீட்சை நடத்தியது. அதன்படி பார்படாஸில் உள்ள கெனிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இங்கிலாந்தை பந்துவீச அழைத்தது.
இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு ஜார்ஜ் முன்ஸி - மைக்கேல் ஜோன்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதன்மூலம் ஸ்காட்லாந்து அணியானது பவர்பிளே ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் 6.2 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி விக்கெட் இழப்பின்றி 51 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.
தொடர் மழை காரணமாக ஆட்டம் தாமதமானதுடன், ஓவர்களும் குறைக்கப்பட்டன. அதன்படி இப்போட்டியானது 10 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது. அதன்படி இன்னிங்ஸைத் தொடர்ந்த ஸ்காட்லாந்து அணிக்கு ஜார்ஜ் முன்ஸி - மைக்கேல் ஜோன்ஸ் இருவரும் அதிரடியாக விளையாடி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை மிரளவிட்டனர். இப்போட்டியில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களும் விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மைக்கேல் ஜோன்ஸ் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 45 ரன்களையும், ஜார்ஜ் முன்ஸி 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 41 ரன்களையும் சேர்த்தனர்.
இதன்மூலம் ஸ்காட்லாந்து அணியானது 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 90 ரன்களை குவித்தது. இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 10 ஓவர்களில் 109 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி இங்கிலாந்து அணி பேட்டிங்கிற்கு வருவதற்கு முன்னரே மீண்டும் மழை பெய்ய தொடங்க ஆட்டம் தாமதமானது. அதன்பின் மழை தொடர்ந்த் காரணத்தால் இப்போட்டியானது கைவிடப்படுவதாக போட்டி நடுவர்கள் அறிவித்தனர். இதன்மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளியானது பகிர்ந்தளிக்கப்பட்டது.