நடத்தை விதிகளை மீறியதாக ரஷித் கானிற்கு அபராதம் - ஐசிசி நடவடிக்கை!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. இதில் நாளை மறுநாள் நடைபெறும் முதலாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடவுள்ளது.
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்காத தென் ஆப்பிரிக்க அணியும், முதல் முறையாக டி20 உலகக்கோப்பை தொடர் அரையிறுதிக்குள் நுழைந்துள்ள ஆஃப்கானிஸ்தான் அணியும் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டியானது டிரினிடாட்டில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்கள் தயாராகி வருகின்றன.
இந்நிலையில், வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கானிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது கடைசி ஓவரில் ரஷித் கான் ரன் ஓட மறுத்த சக நாட்டு வீரரான கரீம் ஜானத்தை நோக்கி ஆக்ரோஷமாக பேட்டை வீசினார்.
இது ஐசிசியின் நடத்தை விதி 2.9 படி குற்றம் என்பதால் கள நடுவர்கள் ஐசிசியிடம் முறையிட்டுள்ளனர். இதனையடுத்து ஐசிசியின் நடத்தை விதிகளை மீறிய குற்றத்திற்காக ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷித் கானிற்கு ஒரு கரும்புள்ளியை ஐசிசி அபராதமாக விதித்துள்ளது. மேற்கொண்டு கடந்த 24 மாதங்களில் ரஷித் கான் பெறும் முதல் கரும்புள்ளி இது என்பதால் அவர் மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கையையும் எடுக்கப்படவில்லை.
அதேசமயம் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வீரர் 24 மாதங்களில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட கரும்புள்ளிகளைப் பெரும் பட்சத்தில் அவருக்கு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும். ஆனால் ரஷித் கான் ஒரு கரும்புள்ளியை மட்டுமே பெற்றுள்ள காரணத்தால் அவருக்கு மேற்கொண்டு எந்த அபராதமும், தடையையும் ஐசிசி விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.