பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் - ஜஸ்ப்ரித் பும்ரா!

Updated: Mon, Jun 10 2024 19:29 IST
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் - ஜஸ்ப்ரித் பும்ரா! (Image Source: Google)

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது பேட்டிங்கில் சொதப்பியதன் காரணமாக 19 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 42 ரன்களையும், அக்ஸர் படேல் 20 ரன்களையும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஹாரிஸ் ராவூஃப் மற்றும் நஷீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியிலும் முகமது ரிஸ்வானை தவிர்த்து மற்ற நட்சத்திர வீரர்கள் அனைவரும் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

அதன்பின் அணியின் நம்பிக்கையாக இருந்த முகமது ரிஸ்வானும் 30 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, இறுதிவரை போராடிய பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.

மேலும் இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இப்போட்டி முடிந்து பேசிய பும்ரா, “பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை வென்றதில் பெரும் மகிழ்ச்சி. இந்த போட்டியில் நாங்கள் பதற்றப்படாமல் அமைதியாக இருந்ததுதான் எங்களுக்குச் சாதகமாக அமைந்தது. நாங்கள் பேட்டிங் செய்த போது சூழல் பந்துவீச்சிற்கு சாதகமாக இருந்தது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் நாங்களும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டோம்.  நாங்கள் பெற்ற வெற்றியால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

மேலும், நாங்கள் இந்தியாவில் விளையாடவில்லை என உணரவில்லை. ஏனெனில் எங்களுக்கு இங்கு கிடைக்கும் ரசிகர்களின் உற்சாகமும், ஆதரவும் பாராடடுக்குறியது. மேலும் இங்குள்ள மக்கள் எங்களை உண்மையிலேயே நேசித்துள்ளனர், எனவே எங்களுக்கு கிடைத்த ஆதரவில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் தற்போது அடுத்த போட்டிக்கு தயாராகி வருகிறோம். ஏனெனில் நாங்கள் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றிருந்தாலும், அடுத்தடுத்த போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். அது எந்த விளையாட்டாக இருந்தாலும், உங்களால் முடிந்ததை முயற்சி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை