எங்களின் கிரிக்கெட் வரலாற்றில் இது மிகப்பெரிய வெற்றி - ரஷித் கான்!

Updated: Sat, Jun 08 2024 12:31 IST
Image Source: Google

ஐசிசியின் ஒன்பதாவது ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் ஆடின. கயானாவில் நடைபெற்ற இப்போட்டியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது.

ஆஃப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக குர்பாஸ் 80 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, பவுல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து வெறும் 75 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 84 ரன் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. 

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றியின் ஆஃப்கான் அணி கேப்டன் ரஷித் கான், “எங்களின் கிரிக்கெட் வரலாற்றில் இது மிகப்பெரிய வெற்றி. குறிப்பாக பெரிய அணியான நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் இது எங்களின் சிறப்பான ஆட்டங்களில் ஒன்றாகும். இது ஒட்டுமொத்தமாக எங்கள் அணியைச் சேர்ந்த அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டதின் வெளிப்பாடு தான் இந்த வெற்றி ஆகும்.

எங்களின் தொடக்க வீரர்கள் இன்றைய தினம் சிறப்பாக விளையாடினர். பேட் மற்றும் பந்துவீச்சில் எங்களின் சிறப்பான செயல் திறன் இது. இப்படிப்பட்ட ஒரு அணியை வழிநடத்த நான் பெருமைப்படுகிறேன். நான் மெதுவாக ஆரம்பித்தாலும் எனது செயல் திறன் மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் முதல் ஆறு ஓவர்களில் 30 ரன்கள் மட்டும் எடுத்தோம். போட்டியை அடுத்து எப்படி கொண்டு செல்வது என்பது பற்றி பேசினோம். அதுதான் தேவையாகவும் இருந்தது.

எங்கள் பந்து வீச்சாளர்கள் திறமையை பயன்படுத்தி பந்து வீசும் பொழுது எங்களுக்கு எதிராக 160 ரன்களை சேஸிங் செய்வது கடினம். நாங்கள் எங்கள் திறமையைப் சரியாக பயன்படுத்தினால் எங்களை வீழ்த்துவது மிகவும் கடினம். வெற்றியோ, தோல்வியோ நாம் செய்ய வேண்டிய விஷயங்களை சரியாக செய்ய வேண்டும். முடிவைப்பற்றி நான் எப்பொழுதும் கவலைப்படுவது கிடையாது” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை