பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு செல்வதே சந்தேகம் தான் - வாசிம் அக்ரம் விமர்சனம்!

Updated: Fri, Jun 07 2024 20:25 IST
பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு செல்வதே சந்தேகம் தான் - வாசிம் அக்ரம் விமர்சனம்! (Image Source: Google)

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டல்லாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர்கள் சோபிக்க தவறிய காரணத்தால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் ஆசாம் 44 ரன்களும், ஷதாப் கான் 40 ரன்களையும் சேர்த்தனர். அமெரிக்க அணி தரப்பில் கெஞ்ஜிகே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய அமெரிக்க அணியில் ஸ்டீவன் டெய்லர் 12 ரன்களில் ஆட்டமிழந்தாலும், கேப்டன் மொனாங்க் படேல் 50 ரன்களையும், ஆண்ட்ரிஸ் கஸ் 35  ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆரோன் ஜோன்ஸ் 36 ரன்களையும், நிதீஷ் குமார் 14 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ரன்களைச் சேர்த்தனர். இதன்மூலம் அமெரிக்க அணியும் 20 ஓவர்கள் ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமா இழந்து 159 ரன்களைச் சேர்த்ததன் மூலம் இப்போட்டியானது சமனில் முடிந்து, சூப்பர் ஓவருக்கு சென்றது. 

இதையடுத்து சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணியானது 18 ரன்களைச் சேர்த்து அசத்த, பாகிஸ்தான் அணியானது 13 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் அமெரிக்க அணியானது சூப்பர் ஓவரில் 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தங்களது முதல் போட்டியிலேயே அமெரிக்க அணியானது அபார வெற்றியைப் பதிவுசெய்து வரலாற்று சாதனையைப் படைத்து அசத்தியுள்ளது. 

இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கு பாகிஸ்தான் அணி முன்னேறுவது கடினம் தான் என்று அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “பாகிஸ்தான் அணியின் பரிதாபகரமான செயல்திறன் இது. அமெரிக்காவுக்கு எதிராக விளையாடும் போது, ​​நான் நம்பிக்கையுடன் இருந்தேன். மேலும் ஒவ்வொரு பாகிஸ்தானிய ரசிகர்களும் இப்போட்டியில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் விளையாடிய விதத்திற்குப் பிறகு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது.

ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் அமெரிக்க வீரர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அதிலும் சூப்பர் ஓவரில் 19 ரன்களை சேர்ப்பது என்பது ஒரு ஓவரில் 36 ரன்களை எடுப்பதற்கு சமமானது. எனவே, அமெரிக்கா அணி இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதை ஒப்புகொண்டு தான் ஆக வேண்டும். இந்த தோல்வியின் மூலம் பாகிஸ்தானும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற இங்கிருந்து போராடும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர்கள் மேற்கொண்டு இந்தியாவுடன் (ஜூன் 9 அன்று) இன்னும் இரண்டு நல்ல அணிகளுடன் (அயர்லாந்து மற்றும் கனடா) விளையாட வேண்டும்.

மேலும் நேற்றைய ஆட்டத்தின் சிறந்த தருணம் எதுவென்று கேட்டால் அமெரிக்க அணியின் கேப்டன் மோனாங்க் பட்டேலின் இன்னிங்ஸ் தான். ஏனெனில் அவர் பேட்டிங் செய்த விதம் மற்றும் இன்னிங்ஸ் முழுவதும் அவரது ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்து போட்டியை எடுத்துச் சென்ற விதம் அருமையாக இருந்தது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு முறையும் அவர்களின் பீல்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. ஆரம்பத்திலேயே அமெரிக்கா விக்கெட்டுகளை வீழ்த்தியது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. இதில் பாபர் ஆசாம், ஷதாப் கான் ஆகியோர் மட்டுமே ஓரளவு சிறப்பாக விளையாடி பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

அவர்களைத் தவிர்த்து மற்ற எந்த வீரரும் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. பாகிஸ்தான் அணியின் ஃபில்டிங்கைப் பற்றி பேசினால் சர்வதேச கிரிக்கெட்டில் இது சராசரிக்கும் மிக குறைவு என்றுதான் சொல்லவேண்டும். பாகிஸ்தானின் ஒட்டுமொத்த கிரிக்கெட்டும் சராசரியாக மட்டுமே இருந்தது. வெற்றியும் தோல்வியும் விளையாட்டின் ஒரு பகுதி தான். ஆனால் அதற்காக நீங்கள் கடைசி பந்து வரை நீங்கள் போராட வேண்டும் - பாகிஸ்தான் அணி வீரர்களோ டைவ் செய்ய முயற்சி செய்யவில்லை, அடுத்தடுத்து கேட்சுகளை விட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இது ஒரு மோசமான நாள்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை