இந்த வெற்றி ஒரு ஆரம்பம் மட்டுமே - ரோஹித் சர்மா!

Updated: Mon, Jun 10 2024 11:09 IST
Image Source: Google

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது பேட்டிங்கில் சொதப்பியதன் காரணமாக 19 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 42 ரன்களையும், அக்ஸர் படேல் 20 ரன்களையும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஹாரிஸ் ராவூஃப் மற்றும் நஷீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியிலும் முகமது ரிஸ்வானை தவிர்த்து மற்ற நட்சத்திர வீரர்கள் அனைவரும் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

அதன்பின் அணியின் நம்பிக்கையாக இருந்த முகமது ரிஸ்வானும் 30 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, இறுதிவரை போராடிய பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. 

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “இந்த போட்டியில் நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. எங்களுடைய பாதி இன்னிங்க்ஸின் முடிவில் நாங்கள் நல்ல நிலையில் இருந்தோம். ஆனால், அதன் பின் வரிசையாக விக்கெட்களை இழந்தோம். இந்த பிட்ச்சில் ஒவ்வொரு ரன்னும் முக்கியம் என்பது எங்களுக்கு தெரியும். இந்த பிட்ச்சில் ரன் குவிக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் நாங்கள் குறைவான ஸ்கோர் எடுத்தோம்.

எங்கள் அணியின் பந்துவீச்சு பலமாக இருந்ததால் நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெறுவோம் என உறுதியாக இருந்தேன். பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தபோது பாதி இன்னிங்க்ஸின் முடிவில் நான் இந்திய வீரர்களை அழைத்து பேசினேன். அப்போது, ‘நமது பேட்டிங் வரிசையில் சரிவை சந்தித்தோம். அதே போல அவர்களும் பேட்டிங் வரிசையில் சரிவை சந்திப்பார்கள்" என்று கூறினேன். நான் கூறியது போலவே அவர்களும் சரிவை சந்தித்தனர். 

ஒருபோட்டியில் அனைவரின் சிறிய பங்களிப்பு கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அதிலும் பும்ரா தனது பலத்திற்கு ஏற்றவாறு பந்துவீசி, தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை காட்டியுள்ளார். நடப்பு டி20 உலகக்கோப்பை தொடர் முழுவதும் அவர் இதே மனநிலையில் இருக்க வேண்டும். மேலும் இப்போட்டிக்கான வெற்றி ஒரு ஆரம்பம் மட்டுமே, நாம் செல்ல வேண்டிய தூரம் நிறையவுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை