அமெரிக்க அணிக்கு பெனால்டி ரன்கள்; முதல் அணியாக மோசமான சாதனை!
இந்தியா - அமெரிக்கா அணிகள் மோதிய ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி இன்று நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததார். அதன்படி களமிறங்கிய அமெரிக்க அணியில் தொடக்க வீரர் ஷயான் ஜஹாங்கீர் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் ஆரோன் ஜோன்ஸும் 11 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பிய நிலையில், மற்றொரு தொடக்க வீரரான ஸ்டீவன் டெய்லரும் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் நிதீஷ் குமார் 27 ரன்களையும், கோரி ஆண்டர்சன் 15 ரன்களையும் சேர்த்தனர். அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் யாரும் பெரிதாக சோபிக்காத நிலையில், அமெரிக்க அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களைச் சேர்த்தது.
இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களை வீசி 9 ரன்களை மட்டுமே கொடுத்த நிலையில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேலும் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியிலும் விராட் கோலி, கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரிஷப் பந்த ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.
ஆனாலும் அடுத்து இணைந்த சூர்யகுமார் யாதர் 50 ரன்களையும், ஷிவம் தூபே 31 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்க அணியை வீழ்த்தி, சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியின் போது அமெரிக்க அணிக்கு 5 ரன்கள் பெனால்டியாக கள நடுவர்கள் அறிவித்தனர். ஆனால் இதற்கான காரணம் தெரியாமல் ரசிகர்கள் குழம்பினர். ஆனால் சமீபத்தில் சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஸ்டாப் கிளாக் முறையை ஐசிசி அறிமுகம் செய்தது. இந்த விதியின் படி ஓவர்கள் வீசப்படும் நேரம், ஆட்ட நேரங்களைத் துல்லியமாகக் கணக்கிட முடியும். இந்த ஸ்டாப் கிளாக் முறையை ஐசிசி கட்டாயமாக்கியுள்ளது.
இந்தப் புதிய விதிமுறைப்படி ஒரு ஓவருக்கும் இன்னொரு ஓவருக்கும் இடையேயான இடைவெளி 60 நொடிகளுக்கு மிகக் கூடாது, அதாவது ஒரு ஓவர் முடிந்து அடுத்த ஓவரை 60 நொடிகளுக்குள் பந்துவீச்சாளர் ஓவரை வீசத் தொடங்கி விட வேண்டும். இதனை தெளிவுப்படுத்தும் விதமாக மைதானத்தில் உள்ள பெரிய திரையில் 60 முதல் பூஜ்ஜியம் வரை எண்ணும் கடிகாரம் ஸ்கீரினில் காட்டப்படும். இந்த நேரக்கட்டுப்பாட்டை 2 முறைக்கு மேல் மீறினால் பந்துவீச்சு அணிக்கு 5 ரன்கள் அபராதமாக விதிக்கப்படும்.
அதாவது பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் போனஸாக கொடுக்கப்படும். இந்த விதியின் பதி தான் தற்போது அமெரிக்கா அணிக்கு 5 ரன்களை பெனால்டியாக கொடுத்துள்ளது. முன்னதாக போட்டியின் போது கள நடுவர்கள் அமெரிக்க கேப்டன் ஆரோன் ஜோன்ஸை இரண்டு முறை எச்சரித்தும் இத்தவறை அமெரிக்க அணி மீண்டு செய்துள்ளது. அதன் பிறகே அமெரிக்காவுக்கு பெனால்டி ரன்களை விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.