ரோஹித், கோலியின் எதிர்காலம் என்ன? - ராகுல் டிராவிட் பதில்!

Updated: Thu, Nov 10 2022 22:24 IST
T20 World Cup: We should have been able to get to 180-185, admits Rahul Dravid after semi-final loss (Image Source: Google)

டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கபட்ட இந்திய அணி, அரையிறுதியில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது. இந்த டி20 உலக கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

பும்ரா, ஜடேஜா ஆகிய 2 முக்கியமான பெரிய வீரர்கள் காயத்தால் ஆடாதபோதிலும், அதெல்லாம் அணியின் வெற்றியை பாதிக்காதவகையில், சூப்பர் 12 சுற்றில் 5 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி.

அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 168 ரன்கள் அடித்தது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் ராகுல், ரோஹித், சூர்யகுமார் யாதவ் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து மூவரும் ஏமாற்றமளித்தனர். விராட் கோலி 50 ரன்கள் மற்றும் சூர்யகுமார் யாதவின் 63 அதிரடி அரைசதங்களால் 20 ஓவரில் 168 ரன்கள் அடித்தது இந்திய அணி.

இதையடுத்து 169 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய இருவரும் அதிரடியாக ஆடி, விக்கெட்டை இழக்காமல் அவர்கள் இருவருமே ஆட்டத்தை முடித்துவிட்டனர். பட்லர் 49 பந்தில் 80 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்தில் 86 ரன்களும் குவித்தனர். இவர்களது அதிரடியால் 16 ஓவரில் இலக்கை அடித்து இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் அரையிறுதி போட்டியில் படுதோல்வி அடைந்தது இந்திய அணிக்கு மறக்க முடியாத மாபெரும் அடி.

இந்திய பந்துவீச்சாளர்கள் சரியாக பந்துவீசவில்லை என்பதை போட்டிக்கு பின் கேப்டன் ரோஹித் சர்மா வருத்தத்துடனும் அதிருப்தியுடனும் தெரிவித்தார். வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் சகஜம். ஆனால் இந்திய அணி தோற்ற விதம் மிக மோசமானது. ஆனால் பவுலிங்கை மட்டும் குறைகூற முடியாது. பேட்டிங்கில் இன்னும் 15-20 ரன்கள் கூடுதலாக அடித்திருக்க வேண்டும் என்பதை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சுட்டிக்காட்டினார்.

இந்த தோல்விக்கு இந்திய அணி தேர்வு செய்த ஆடும் லெவன் காம்பினேஷனும் ஒரு காரணம் எனலாம். அனைத்து அணிகளிலும் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் நன்றாக செயல்பட்டபோதிலும், சாஹலுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பளிக்கப்படவில்லை. அஷ்வினும் மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறினார். ஆனாலும் கூட, சாஹலுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இன்றைய அரையிறுதி போட்டியிலும் அஷ்வின் 2 ஓவரில் 27 ரன்களை வாரி வழங்கினார். அக்ஸர் படேலும் 4 ஓவரில் 30 ரன்களை வழங்கினார். புவனேஷ்வர் குமார், ஷமி ஆகிய சீனியர் ஃபாஸ்ட் பவுலர்களும் பயங்கரமாக அடி வாங்கினர்.

இந்திய அணியின் இந்த படுதோல்வி, உண்மையாகவே அணியின் வலிமை குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், பிரித்வி ஷா, சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர் என இளம் திறமையான அதிரடி வீரர்கள் வரிசைகட்டி நிற்பதால் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் ஓய்வு குறித்து பரிசீலிப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பேசியிருந்த சுனில் கவாஸ்கர், ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் புதிய டி20 அணி கட்டமைக்கப்படலாம். எனவே சீனியர் வீரர்கள் அணியில் தங்கள் நிலையை அறிந்து ஓய்வு குறித்து பரிசீலிப்பார்கள் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அரையிறுதி போட்டிக்கு பின் ரோஹித், கோலி ஆகிய சீனியர் வீரர்களின் டி20 எதிர்காலம் குறித்து கேள்வி ராகுல் டிராவிட்டிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய ராகுல் டிராவிட், “அதுகுறித்தெல்லாம் இப்போது பேசமுடியாது. இப்போதுதான் அரையிறுதி போட்டி முடிந்திருக்கிறது. அவர்கள் மிகச்சிறந்த வீரர்கள். இந்திய அணிக்கு மாபெரும் பங்காற்றியிருக்கிறார்கள். இந்திய அணியில் தரமான வீரர்கள் தான் உள்ளனர். எனவே ஓய்வு குறித்தெல்லாம் பேச இது சரியான நேரம் கிடையாது. அடுத்த உலக கோப்பைக்கு தயாராக வேண்டும்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை