முத்தரப்பு டி20 தொடர்: நெதர்லாந்துக்கு 151 ரன்களை இலக்காக நிர்ணயித்தது அயர்லாந்து!

Updated: Sun, May 19 2024 22:06 IST
Image Source: Google

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் மாதம் நடைபெறவுள்ள நிலையில், இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்தவகையில், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் - ஆண்ட்ரூ பால்பிர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பால்பிர்னி மற்றும் பால் ஸ்டிர்லிங் இருவரும் தலா 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய ஹரி டெக்டரும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். 

இப்போட்டியில் மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய லோர்கன் டக்கர் சிரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய கர்டிஸ் காம்பேர் 10 ரன்களிலும், ஜார்ஜ் டக்ரேல் 6 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லோர்கன் டக்கரும் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 40 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் இணைந்த கரேத் டெலானி மற்றும் மார்க் அதிர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்க் அதிர் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 49 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து நூழிலையில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து 19 ரன்களில் கரேத் டெலானியும் விக்கெட்டை இழந்தார். 

இதன்மூலம் அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களைச் சேர்த்தது. நெதர்லாந்து அணி தரப்பில் டிம் பிரிங்கிள் 3 விக்கெட்டுகளையும், டேனியல் டோர்ம், பால் வான் மீகெரன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி விளையாடவுள்ளது. 

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை