BAN vs SA, 1st Test: தைஜுல் இஸ்லாம் அபாரம்; தடுமாறும் தென் ஆப்பிரிக்க அணி!

Updated: Mon, Oct 21 2024 20:17 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்க அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தாக்காவில் தொடங்கியது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியானாது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அந்த அணியில் அதிகபட்சமாகவே தொடக்க வீரர் ஷாத்மான் இஸ்லாம் 30 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதிலும் குறிப்பாக அணியின் நட்சத்திர வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளிததனர். 

இதனால் வங்கதேச அணியானது முதல் இன்னிங்ஸில் 106 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய காகிசோ ரபாடா, வியான் முல்டா, கேஷவ் மஹாராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கும் தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரம் 6 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.

பின்னர் இணைந்த டோனி டி ஸோர்ஸி மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் 23 ரன்களை எடுத்த நிலையில் டிரிஸ்டன் ஸ்ட்ப்ஸ் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த டேவிட் பெட்டிங்ஹாமும் 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவர்களைத் தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீரரான டோனி டி ஸோர்ஸி 30 ரன்களை மட்டுமே சேர்த்து விக்கெட்டை இழந்த நிலையில், இப்போட்டியில் வாய்ப்பு பெற்ற மேத்யூ பிரீட்ஸ்கி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

பின்னர் ஜோடி சேர்ந்த கைல் வெர்ரைன் - வியான் முல்டர் இணை அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்களைச் சேர்த்துள்ளது. அந்த அணியில் கைல் வெர்ரைன் 18 ரன்களுடனும், வியான் முல்டர் 17 ரன்களுடனும் என களத்தில் உள்ளனர். வங்கதேச அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதனையடுத்து 34 ரன்கள் முன்னிலையுடன் தென் ஆப்பிரிக்க அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை