இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது சுற்று ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள சத்திஷ்கர் மற்றும் தமிழ்நாடு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விஜயநகரத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சத்தீஷ்கர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு துஷார் ரஹேஜா மற்றும் ஜெகதீசன் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு அடித்தளமிட்டனர். இதில் ரஹேஜா 28 ரன்னிலும் ஜெகதீசன் 21 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய பூபதி குமாரும் 37 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய இந்திரஜித் மற்றும் பிரதோஷ் பால் இணை பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திரஜித் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில், பிரதோஷ் பால் 31 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அதன்பின் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 75 ரன்களில் இந்திரஜித்தும் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய விஜய் சங்கர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அரைசதம் கடந்தும் அசத்தினார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய அவர் 2 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் என 71 ரன்களைக் குவித்தார். இதன்மூலம் தமிழ்நாடு அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சத்தீஷ்கர் அணி தரபில் ஹர்ஷ் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஷுபம் அகர்வால், பிரதீக் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய சத்தீஷ்கர் அணிக்கு புபென் லல்வானி மற்றும் அஷுதோஷ் சிங் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் இப்போட்டியில் அரைசதம் கடந்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 118 ரன்கள் பார்ட்னஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 71 ரன்களை எடுத்திருந்த அஷுதோஷ் சிங் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சஞ்சீத் தேசாய், கேப்டன் அமந்தீப் காரே, பிரதீக் யாதவ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்ற மளிக்க, மற்றொரு தொடக்க வீரரான புபென் லல்வானியும் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின் களமிறங்கிய வீரர்களில் எக்நாத் கெர்கர் 27 ரன்களையும், ககந்தீப் சிங் 33 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் சத்தீஷ்கர் அணி 46 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 228 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமிழ்நாடு அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் தமிழ்நாடு அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் சத்தீஷ்கர் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News