சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த தமிம் இக்பால்!

Updated: Sat, Jan 11 2025 08:55 IST
Image Source: Google

வங்கதேச அணியின் அதிரடி தொடக்க வீரரும், முன்னாள் கேப்டனுமான தமீம் இக்பால் (Tamim Iqbal) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் சர்வதே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த தமிம் இக்பால், அப்போதைய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் தலையீட்டிற்குப் பிறகு அடுத்த நாளே தனது முடிவை மாற்றிக்கொண்டார். 

ஆனால் அதன்பின் ஷாகிப் அல் ஹசன் மற்றும் தமிம் இக்பால் ஆகியோரது மோதம் மற்றும் தேர்வுகுழுவில் ஏற்பட்ட சலசலப்புகள் காரணமாக வங்கதேச அணியில் இருந்து அவர் ஓரங்கப்பட்டார். இதனால் கிட்டத்திட்ட ஓராண்டுக்கு மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்த தமிம் இக்பால் உள்ளூர் மற்றும் ஃபிரான்சைஸ் தொடர்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அவர் இடம்பிடிப்பாரா என்ற கேள்விகள் எழுத்தொடங்கியது.

மேலும் அவர் முழு உடற்தகுதியுடன் உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாக ரன்களைக் குவித்து வந்ததன் காரணமாக பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான வங்கதேச அணியில் தமிம் இக்பால் இடம்பிடிப்பார் என வங்கதேச கிரிக்கெட் வாரிய வட்டாரங்களும் தெரிவித்திருந்தன. இந்நிலையில் தான் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து தேர்வாளர்களுக்கு தனது பதிலை தெரிவித்துள்ளார். 

இருப்பினும் தேர்வாளர்கள் மற்றும் அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ உள்ளிட்டோர் அவரது முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்திய நிலையிலும், தமிம் இக்பால் தான் ஓய்வு பெறும் முடிவில் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து தமீம் தனது பேஸ்புக் பக்கத்தில், "நான் நீண்ட காலமாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகி இருக்கிறேன். அந்த இடைவெளி தொடரும். சர்வதேச கிரிக்கெட்டில் எனது அத்தியாயம் முடிந்துவிட்டது.

நான் இதைப் பற்றி நீண்ட காலமாக யோசித்து வருகிறேன். இப்போது சாம்பியன்ஸ் கோப்பை போன்ற ஒரு பெரிய தொடர் வருவதால், நான் யாருடைய கவனத்தின் மையமாக இருக்க விரும்பவில்லை, அது அணியின் கவனத்தை சிதறடிக்கக்கூடும். கேப்டன் நஜ்முல் ஹொசைன் என்னை அணிக்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டார். என்னை மீண்டும் அணிக்கு திரும்பும் படி கேட்ட அவருக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இருப்பினும், நான் எனது முடிவில் உறுதியாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

கடந்த 2007ஆம் ஆண்டு வங்கதேச அணிக்காக அறிமுகமான தமிம் இக்பால் இதுவரை 241 ஒருநாள் போட்டிகளில் 14 சதங்கள் உட்பட 8,313 ரன்களை எடுத்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வங்கதேச வீரராக சாதனை படைத்துள்ளார். அதே போல டெஸ்ட் மற்றும் டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து 15,192 ரன்களை குவித்துள்ள அவர் அதிக ரன்கள் அடித்த 2ஆவது வங்கதேச வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை