சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் தமிம் இக்பால்!
ஐசிசியின் 2023ஆம் ஆண்டிற்கான ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகாலமாக நடைபெற உள்ளது. அதற்காக உலகின் அனைத்து கிரிக்கெட் அணிகளும் தயாராகி வரும் நிலையில், அண்டை நாடான வங்கதேசம் சொந்த மண்ணில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஜூலை 5ஆம் தேதியான நேற்று தொடங்கிய அந்த தொடரின் முதல் போட்டியில் மழைக்கு மத்தியில் ஆப்கானிஸ்தான் 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.
இந்நிலையில் வங்கதேசத்தின் கேப்டனாக இருக்கும் நட்சத்திர வீரர்கள் தமிம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். வங்கதேசத்தின் நட்சத்திர வீரரான அவர் கடந்த ஒரு வருடமாகவே கை மற்றும் இடுப்பு பகுதிகளில் காயத்தை சந்தித்து பெரும்பாலான போட்டிகளில் விளையாடாமல் இருந்து வந்தார். குறிப்பாக சமீபத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடரிலும் விளையாடாத அவர் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு நடைபெறும் இந்த ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கான முடிவை எடுத்தார்.
இருப்பினும் முதல் போட்டியில் 13 (21) ரன்கள் மட்டுமே எடுத்த அவர் முழுமையாக குணமடையாமல் விளையாடியது தெளிவாக தெரிந்தது. அதனால் பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசிங்கா மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஜ்முல் ஹுசைன் ஆகியோர் அதிருப்தியடைந்ததாக தெரிகிறது. சொல்லப்போனால் நாட்டுக்காக இப்படி பொறுப்பின்றி முழுமையாக விளையாடாதீர்கள் என்ற வகையில் அவர்கள் உள்ளூர் பத்திரிகைகளில் தமீம் இக்பால் பற்றி வெளிப்படையாகவே விமர்சித்ததாகவும் தெரிய வருகிறது.
அதன் காரணத்தாலேயே இன்று திடீரென ஓய்வு பெறும் முடிவை அதிரடியாக எடுத்துள்ள அவர் அதை செய்தியாளர்கள் முன்னிலையில் அறிவிக்கும் போது கண்ணீருடன் விடை பெற்றார்.இதுகுறித்து பேசிய அவர், “இது தான் என்னுடைய முடிவு. நான் என்னுடைய அனைத்தையும் கொடுக்க முயற்சித்தேன். இந்த தருணம் முதல் நான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன். ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியே என்னுடைய கடைசி சர்வதேச போட்டியாகும். இது திடீரென எடுத்த முடிவல்ல. சில காரணங்களுக்காக இதைப் பற்றி நான் ஏற்கனவே சிந்தித்து வந்தேன். இருப்பினும் அதை நான் இங்கு சொல்ல விரும்பவில்லை.
இதுபற்றி என்னுடைய குடும்ப உறுப்பினர்களுடன் பேசி முடிவெடுத்த நான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுவதற்கு இதுவே சரியான தருணம் என்று கருதுகிறேன். இந்த சமயத்தில் என்னுடைய சக அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், வங்கதேச வாரிய நிர்வாகிகள், குடும்ப உறுப்பினர்கள் உட்பட என்னுடைய பயணத்தில் உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் நம்பிக்கை வைத்தது போலவே எனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்கள் நான் வங்கதேசத்திற்காக என்னுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த உதவியாக இருந்தனர். இருப்பினும் இந்த சமயத்தில் என்னுடைய வாழ்வில் அடுத்த பயணத்திற்காக உங்களுடைய பிரார்த்தனை வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கலங்கிய கண்களுடன் பேசி விடை பெற்றார்.
கடந்த 2007ஆம் ஆண்டு 16 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான தமிம் இக்பால், வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்தியாவை தோற்கடிக்க அரை சதமடித்து முக்கிய பங்காற்றியதை இந்திய ரசிகர்களால் மறக்க முடியாது. அந்த வகையில் கடந்த 15 வருடங்களாக 241 ஒருநாள் போட்டிகளில் 14 சதங்கள் உட்பட 8,313 ரன்களை எடுத்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வங்கதேச வீரராக சாதனை படைத்துள்ளார்.
அதே போல டெஸ்ட் மற்றும் டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து 15,205 ரன்களை குவித்துள்ள அவர் அதிக ரன்கள் அடித்த 2ஆவது வங்கதேச வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். அத்துடன் 37 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 21 வெற்றிகளை 60 என்ற சராசரியில் எடுத்துள்ள அவர் 2023 உலகக் கோப்பைக்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இப்படி திடீரென ஓய்வை அறிவித்துள்ளது அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.