BAN vs SL, 3rd ODI: இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது வங்கதேசம்!

Updated: Mon, Mar 18 2024 20:12 IST
BAN vs SL, 3rd ODI: இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது வங்கதேசம்! (Image Source: Google)

 

இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணியும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.

இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை சட்டோகிராமில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்ச் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா ஒரு ரன்னிலும், அவிஷ்கா ஃபெர்னாண்டோ 4 ரன்களிலும், சதீரா சமரவிக்ரமா 14 ரன்களிலும், கேப்டன் குசால் மெண்டிஸ் 29 ரன்களிலும் என அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

பின்னர் இணைந்த சரித் அசலங்கா - ஜனித் லியானகே இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியாக செயலபட்ட லியானகே அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிவந்த சரித் அசலங்கா 37 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய துனித் வெல்லாலகே, வநிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்‌ஷனா, பிரமோத் மதுஷன், லஹிரு குமாரா ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜனித் லியானகே சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன, 11 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 101 ரன்களைச் சேர்த்திருந்தார். இதனால் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் தஸ்கின் அஹ்மத் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணிக்கும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர் அனாமுல் ஹக் 12 ரன்களுக்கும், கேப்டன் நஹ்முல் ஹொசைன் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய தாவ்ஹித் ஹிரிடோய் 22 ரன்களுக்கும், மஹ்முதுல்லா ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தன்ஸித் ஹசன் அரைசதம் கடந்து அசத்தினார். 

பின்னர் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தன்ஸித் ஹசன் 9 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 84 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய மெஹிதி ஹசனும் 25 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த முஷ்ஃபிக்கூர் ரஹிம் - ரிஹாத் ஹசன் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றனர். 

இதில் முஷ்ஃபிக்கூர் ரஹிம் 37 ரன்களையும், ரிஹாத் ஹொசைன் 18 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 48 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் வங்கதேச அணி 40.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை