எங்களுடைய இந்த தோல்விக்கு காரணம் இது தான்; ஷுப்மன் கில் விளக்கம்!

Updated: Sat, Jul 06 2024 22:10 IST
Image Source: Google

ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று ஹராரேவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியானது இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி எளிதாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரியான் பராக், ரிங்கு சிங் என நட்சத்திர வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். மேற்கொண்டு ஷுப்மன் கில் 31, வாஷிங்டன் சுந்தர் 27 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர். இதனால் 19.5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

ஜிம்பாப்வே அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் சிக்கந்தர் ரசா, டெண்டாய் சடாரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையைப் பெற்றுள்ளது. மேலும் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக குறைந்தபட்ச இலக்கை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி வென்ற அணியாக ஜிம்பாப்வே மாபெரும் சாதனை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில், “இப்போட்டியில் எங்களது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. ஆனால் ஃபீல்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. எங்களது இந்த தோல்விக்கு மோசமான ஃபீல்டிங்கும் ஒரு காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் இந்த போட்டியில் எதையுமே நிதானமாக செய்யவில்லை, அனைவரும் எதோ அவசரத்துடன் விளையாடுவது  போல் இருந்தது. ஃபீல்டிங்கில் சொதப்பினாலும், பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றே முடிவு செய்திருந்தோம், ஆனால் பேட்டிங்கிலும் நாங்கள் சொதப்பிவிட்டோம்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

அதிலும் இன்னிங்ஸ் தொடங்கிய சிறிது நேரத்திலேயே நாங்கள் பாதி அணியை இழந்துவிட்டோம். அந்த சமயத்தில் நான் பொறுமையாக களத்தில் நின்றிருந்தால் கூட வெற்றி பெற்றிருப்போம். நான் இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் களத்தில் இருந்திருக்க வேண்டும், நான் விக்கெட்டை இழந்தவிதம் ஏமாற்றத்தை கொடுத்தது. இருப்பினும் எங்களிடம் இறுதிவரை கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. ஆனால் நீங்கள் 115 ரன்களைத் துரத்தும்போது உங்கள் நம்பர்.10 பேட்டர் பேட்டிங் செய்து கொண்டிருந்தால் நிச்சயம் ஏதோ தவறாக நடந்துள்ளதை உங்களால் உணரமுடியும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை