அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. அதன்படி, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அத்தியது.
இதனையடுத்து நாடு திரும்ப இருந்த இந்திய அணி வீரர்கள் புயல் காரணமாக வெஸ்ட் இண்டீஸிலேயே தஞ்சமடைந்தனர். அதன்படி இந்திய அணி வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், ஆதரவு ஊழியர்கள், பிசிசிஐ அதிகாரிகள் என முழு குழுவும் பார்படாஸில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளனர். மழை உள்ளிட்ட மோசமான வானிலை காரணமாக இந்திய அணியினர் தங்கியுள்ள விடுதிகளில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி புயல் விமான நிலையத்தில் விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் இந்திய அணி திட்டமிட்டபடி அமெரிக்காவின் நியூயார்க்குக்குச் செல்ல முடியவில்லை. நியூயார்க்கிலிருந்து துபாய் வழியாக டெல்லி திரும்பத் திட்டமிட்ட நிலையில் தற்போது இந்தப் பயணத் திட்டம் மாற்றப்பட்டிருக்கிறது. அந்தவகையில் தற்போது இந்திய அணி வீரர்கள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆகியோர் தனி விமானம் மூலம் இந்தியவிற்கு அழைத்து வர பிசிசிஐ திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி இன்று தனி விமானம் மூலம் திருபவுள்ள அவர்கள் நாளை மாலை டெல்லி வந்தடைவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன்ன. அதில் வீரர்கள், அவர்களது குடும்பத்தினர், பயிற்சியாளர்கள் எனக் கிட்டத்தட்ட 50 பேர் தனி விமானம் மூலம் டெல்லி வரவுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு உலகக்கோப்பை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.