IND vs AUS, 2nd Test: அதிரடி காட்டும் கம்மின்ஸ்; அசத்தும் அஸ்வின்!

Updated: Fri, Feb 17 2023 14:28 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி இன்று டெல்லியில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா இருவரும் பேட்டிங்கை தொடங்கினர். ஆரம்பம் முதலே சொதப்பி வந்த டேவிட் வார்னர் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்து ஷமி ஓவரில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து மார்னஸ் லபுஷேன் களமிறங்கினார். இவர் 4 பவுண்டரிகள் அடித்து 25 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார்.

இவரைத் தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் வந்தார். ஆனால், அவர் வந்த வேகத்தில் அஸ்வின் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன் பிறகு டிராவிஸ் ஹெட் களமிறங்கினார். ஒருபுறம் நிதானமாக ஆடிய கவாஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 20ஆவது அரை சதத்தை பூர்த்தி செய்தார். 

அதன்பின் சதத்தை நெருங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட உஸ்மான் கவாஜா 81 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து டிராவிஸ் ஹெட் 12, அலெக்ஸ் கேரி 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த பீட்டர் ஹாண்ட்ஸ்கோம்ப் - கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

இதனால் தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஹாண்ட்ஸ்கோம்ப் 36 ரன்களுடணும், பாட் கம்மின்ஸ் 23 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை