சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார்? - கம்பீர் பதில்!
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதற்கேற்றவகையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்நிலையில் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பராக யார் செயல்படுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ஏனெனில் அணியில் கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பந்த் உள்ள நிலையில் இவர்களில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தில் அதிகரித்துள்ளன. இருப்பினும் நடந்து முடிந்த இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கேஎல் ராகுல் பிளேயிங் லெவனில் இடம்பிடித்ததால் அவர் தற்போது முன்னிலையில் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் யார் என்பது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் தனது கருத்தை வெளிப்படையாக கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் முதல் விக்கெட் கீப்பர் தேர்வாக கேஎல் ராகுல் இருப்பார். கேஎல் ராகுல் தான் தற்போது எங்கள் அணியின் நம்பர்-1 விக்கெட் கீப்பர், இதைத்தான் நான் இப்போது சொல்ல முடியும்.
ரிஷப் பந்திற்கும் வாய்ப்பு கிடைக்கும், ஆனால் தற்போது ராகுல் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதனால் நங்கள் இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுடன் போட்டியை எதிர்கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக இங்கிலாந்து தொடரில் கேஎல் ராகுலின் ஃபார்ம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அவர் 5ஆவது இடத்தில் பேட்டிங் செய்து 40 ரன்கள் எடுத்து தனது ஃபார்மை மீண்டும் ஒருமுறை நிரூபித்தார்.
இந்திய அணிக்காக இதுவரை 80 ஒருநாள் போட்டிகளில் 75 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள கேஎல் ராகுல் 2,903 ரன்களை எடுத்துள்ளார். மேற்கொண்டு அவர் தொடக்க வீரராகவும், மிடில் ஆர்டரிலும் அபாரமாக செயல்பட்டுள்ளார். அதிலும் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்யும்போது ராகுலின் ஒருநாள் போட்டி சராசரி 55 ஐ விட அதிகமாக உள்ளது. இதனால்தான் தற்போது ரிஷப் பந்தை விடவும், இந்திய அணிக்கு விக்கெட் கீப்பராக ராகுல் முதல் தேர்வாக உள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹார்திக் பாண்டியா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா. ரிஸர்வ் வீரர்கள் - யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது ஷமி, ஷிவம் தூபே