அணி நிர்வாகம் கேஎல் ராகுலுக்கு தொடர்ந்து ஆதரவாக உள்ளது - கௌதம் கம்பீர்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நாளை (அக்டோபர் 24) நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை சமன்செய்யும். அதேசமயம் நியூசிலாந்து அணி இப்போட்டியில் வெற்றிபெற்றால் டெஸ்ட் தொடரை கைப்பற்று. இதனால் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் யார் யார் இடம்பிடிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனனில் முதல் டெஸ்ட் போட்டியின் போது காயத்தை சந்தித்திருந்த ரிஷப் பந்த், ஷுப்மன் கில் ஆகியோர் முழு உடற்தகுதியுடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கொண்டு கடந்த போட்டியில் விளையாடிய சர்ஃப்ராஸ் கானும் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியுள்ளார். இதில் கேஎல் ராகுல் மட்டுமே ரன்களைச் சேர்க்க தவறினார்.
அதிலும் குறிப்பாக முதல் இன்னிங்ஸில் ரன்கள் ஏதுமின்றியும், இரண்டாவது இன்னிங்ஸில் 12 ரன்களையும் மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்திருந்தார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுலுக்கு இடம் கிடைக்குமா என்ற சந்தேகங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இருப்பினும் கேஎல் ராகுலுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்க அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “முதலில், சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் ஒரு பொருட்டல்ல. அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க வீரர்கள் சமூக ஊடகங்கள் மூலமாகவோ அல்லது நிபுணர்களின் கருத்து மூலமாகவோ தேர்ந்தெடுக்கப்படவில்லை. அணி நிர்வாகம் என்ன நினைக்கிறது, தலைமைக் குழு என்ன நினைக்கிறது என்பது தான் அதில் மிக முக்கியம். கடந்த காலங்களில் கேஎல் ராகுல் சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார்.
மேலும் பலமுறை கடினமான ஆடுகளங்களிலும், அழுத்தமான சூழ்நிலைகளிலும் கேஎல் ராகுல் திட்டமிட்டபடி சிறப்பாக விளையாடி, அணியின் வெற்றியில் பங்காற்றியுள்ளார். அவர் பெரிய ஸ்கோர் செய்ய விரும்புகிறார், அதைச் செய்யும் திறன் அவரிடம் உள்ளது. இதனால் அணி நிர்வாகம் அவருக்கு தொடர்ந்து ஆதரவாக உள்ளது. அதனை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்வார் என்று நம்புகிறோம்” என் தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, சர்பராஸ் கான்/கே.எல். ராகுல், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.