ஒரு பந்துவீச்சாளராக அது என்னை சிறப்பாக செயல்பட வைக்கும் - இங்கிலாந்தை எச்சரிக்கும் ஜஸ்ப்ரித் பும்ரா!

Updated: Tue, Jan 23 2024 13:48 IST
ஒரு பந்துவீச்சாளராக அது என்னை சிறப்பாக செயல்பட வைக்கும் - இங்கிலாந்தை எச்சரிக்கும் ஜஸ்ப்ரித் பும்ரா! (Image Source: Google)

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியளில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய தொடராக இது அமைந்துள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதன்படி இவ்விரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. 

இப்போட்டிக்காக இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் ஹைதராபாத்திற்கு சென்று தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் தனிப்பட்ட காரணங்களினால் விராட் கோலி இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலிருந்து விலகியுள்ளது இந்திய அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கான மாற்று வீரர் யார் என்பது குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.

அதேசமயம் டெஸ்ட் கிரிக்கெட்டை வழக்கத்திற்கு மாறாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணியின் பாஸ்பால் அணுகுமுறை இந்திய மண்ணில் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்களைத் தாண்டி கிரிக்கெட் வட்டாரத்திலும் பேசுபொருளாக மாறிவருகிறது. இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வேகமாக ரன்கள் குவிக்கும் முனைப்புடன் பேட்டிங் செய்வதை தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம். ஏனெனில் வேகமாக ரன்கள் எடுக்க முயற்சிக்கும் போது தான் தம்மை போன்ற பந்துவீச்சாளர்களும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து பேசிய அவர், “பாஸ்பால் என்ற சொல்லுடன் உண்மையில் எனக்கு தொடர்பில்லை. ஆனால் அவர்கள் வெற்றிகரமான கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்கள். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டை ஆக்ரோஷமான பாதையில் விளையாட மற்றொரு வழி இருக்கிறது என்பதையும் அவர்கள் இந்த உலகிற்கு காண்பித்துள்ளனர். அதே சமயம் ஒரு பந்துவீச்சாளராக அது என்னை சிறப்பாக செயல்பட வைக்கும் என்று நினைக்கிறேன்.

அதாவது அவர்கள் வேகமாக விளையாடும்போது என்னுடைய பந்துவீச்சில் ஆட்டமிழக்க அதிக வாய்ப்பு உண்டு. மேலும் எனக்கு நிறைய விக்கெட்டுகளும் கிடைக்கும். அந்த வகையில் இது போன்ற சூழலை எப்படி எனக்கு சாதகமாக பயன்படுத்துவது என்பதை பற்றி நான் எப்போதும் நினைப்பதுண்டு. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடிவரும் இங்கிலாந்துக்கு எனது பாராட்டுகள். ஆனால் ஒரு பந்துவீச்சாளராக நாங்களும் தாக்கத்தை ஏற்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை