மீண்டு வர உதவிய அனைவருக்கு நன்றி - ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கடந்த ஓராண்டாக இருப்பவர் ஸ்ரேயாஸ் ஐயர். மேலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வந்தார். இவர் நடப்பாண்டு இங்கிலாந்து தொடரின் போது தோள்பட்டையில் காயமடைந்தார்.
இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக அவர் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 14ஆவது சீசனிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதன்பின் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டார்.
தற்போது காயத்திலிருந்து குணமடைந்துள்ள ஸ்ரேயாஸ் ஐயர் பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாதமியில் உடற்தகுதி பயிற்சிகளை மேற்கொண்டு, அதனை முடித்துள்ளார். இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் ஸ்ரேயாஸ் விளையாடுவது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் தான் குணமடைந்து மீண்டு வர அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவிப்பதாக ஸ்ரேயாஸ் ஐயர் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவரது பதிவில்,“நான் இப்போது தயாராக உள்ளேன். காயத்திலிருந்து மீள எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. இப்போது என் பேட் பேசுவதற்கான நேரம்” என்று பதிவிட்டுள்ளார்.