ஸ்காட்லாந்துக்கு எதிரான வெற்றியின் மூலம் சாதனைகளை அடுக்கிய ஆஸ்திரேலியா!

Updated: Thu, Sep 05 2024 14:51 IST
Image Source: Google

ஸ்காட்லாந்தில் முதல் முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று எடின்பர்க்கில் நடைபேற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்களை மட்டுமே எடுத்தது. 

இதில் அதிகபட்சமாக ஜார்ஜ் முன்ஸி 28 ரன்களையும், மேத்யூ கிராஸ் 27 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் சீன் அபோட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா 9.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 156 ரன்கள் எடுத்து அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 80 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 39 ரன்களையும் சேர்த்தனர்.

மேலும் இப்போட்டியில் அபாரமாக விளையாடி அரைசதம் கடந்த டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் ஆஸ்திரேலிய அணியானது சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சதனைகளையும் படைத்து அசத்தியுள்ளது. அந்தவகையில் ஸ்காட்லாந்துக்கு எதிரான இந்த முதல் டி20 போட்டியில்155 ரன்கள் இலக்கை ஆஸ்திரேலியா 62 பந்துகள் மீதமுள்ள நிலையில் எட்டியது.

இதன்மூலம் 150 அல்லது அதற்கு மேற்பட்ட இலக்கை வெற்றிகரமாக எட்டுவது, பந்துகளின் அடிப்படையில் இது மிகப்பெரிய வெற்றியாகும். இதற்கு முன்பு 2021ல் கிரீஸுக்கு எதிரான டி20 போட்டியில் ருமேனியா அணி 43 பந்துகளில் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்தது. அதேசமயம் டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சாதனையை ஆஸ்திரேலிய அணி சமன்செய்துள்ளது. 

அதன்படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக 166 ரன்கள் இலக்கை 62 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றியைப் பதிவுசெய்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி எட்டிய 155 ரன்கள் என்ற இலக்கானது, சர்வதேச டி20 ஆடவர் கிரிக்கெட் போட்டியில் 10 அல்லது அதற்கும் குறைவான ஓவர்களில் எட்டப்பட்ட அதிகபட்ச இலக்காகவும் அமைந்துள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

மேற்கொண்டு ஸ்காட்லாந்துக்கு எதிரான இந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா தனது இன்னிங்ஸின் போது பவர்பிளேயில் 24 பவுண்டரிகளை அடித்தது. இதில் கடைசி 2.2 ஓவர்களில் 14 பவுண்டரிகள் அடுத்தடுத்து இருந்தன. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பவர்பிளே ஓவரில் அதிக பவுண்டரிகளை விளாசிய அணி எனும் தனித்துவ சாதனையையும் அஸ்திரேலியா பெற்றுள்ளது. இதற்கு முன், 2021ல் செர்பியாவுக்கு எதிராக ருமேனியா 21 பவுண்டரிகளை அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை