தி ஹண்ட்ரெட்: மொயின் அலி, லிவிங்ஸ்டோன் அரைசதம்; பர்மிங்ஹாம் அசத்தல் வெற்றி!
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் ஹண்ட்ரெட் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் - டிரெண்ட் ராக்கெட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் முதலில் களமிறங்கிய டிரெண்ட் ராக்கெட்ஸ் அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மாலன், கொஹ்லர், முன்ரோ, காக்பின் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த கிரெகோரி - டேனியல் சாம்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேனியல் சாம்ஸ் 55 ரன்களையும், கிரெகோரி 35 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 100 பந்துகள் முடிவில் டிரெண்ட் ராக்கெட்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் இலக்கை துரத்திய பர்மிங்ஹாம் பீனிக்ஸ் அணியிலும் தொடக்க வீரர் வில் ஸ்மித் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஹமண்ட்டும் 20 ரன்களோடு நடையைக் கட்டினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் மொயின் அலி - லியாம் லிவிங்ஸ்டோன் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் கடந்த மொயின் அலி 52 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த லியாம் லிவிங்ஸ்டோன் 51 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
இதன்மூலம் பர்மிங்ஹாம் பீனிக்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டிரெண்ட் ராக்கெட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் மொயின் அலி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.