தி ஹண்ட்ரட் 2023: டையில் முடிந்த ஓவல் - வேல்ஸ் ஆட்டம்!

Updated: Mon, Aug 07 2023 13:45 IST
தி ஹண்ட்ரட் 2023: டையில் முடிந்த ஓவல் - வேல்ஸ் ஆட்டம்! (Image Source: Google)

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் ஓவல் இன்விசிபில் - வேல்ஸ் ஃபையர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வேல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர் ஜோ கிளர்க் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன் அரைசதம் கடந்தும் அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் பெரிதளவில் சோபிக்காமல் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இதனால் இன்னிங்ஸ் முடிவில் வேல்ஸ் ஃபையர் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோ கிளர்க் 8 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 69 ரன்களைச் சேர்த்தார். ஓவல் அணி தரப்பில் கஸ் ஆட்கின்சன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஓவல் அணிக்கும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. தொடக்க வீரர்கள் ஜேசன் ராய், வில் ஜேக்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் களமிறங்கிய ஜோர்டன் காஸ் அரைசதம் கடந்த நிலையில் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென், சாம் கரண், சாம் பில்லிங்ஸ் போன்ற அதிரடி வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஆனால் இறுதிவரை களத்தில் இருந்த டாம் கரண் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 சிக்சர்கள், ஒரு பவுண்டரி என 38 ரன்களைச் சேர்த்து அசத்தினார். 

இதன்மூலம் ஓவல் இன்விசிபில் அணியும் இன்னிங்ஸ் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்களைச் சேர்த்தது. இரு அணிகளும் ஒரே ஸ்கோரை எடுத்ததால் இப்போட்டி சமனில் முடிந்ததாகா அறிவிக்கப்பட்டது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக டாம் கரண் தேர்வுசெய்யப்பட்டார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை