பவர்பிளேவில் பந்துவீசிய விதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது - ரஜத் படிதர்!
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று முடிந்த ஐபிஎல் லீக் போட்டியில் ராயால் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதன்மூலம் ஆர்சிபி அணி தங்களுடைய 4ஆவது வெற்றியையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் படிதார், “இந்த போட்டி உண்மையிலேயே அற்புதமாக இருந்தது. எங்கள் அணியின் பந்து வீச்சாளர்கள் தங்கள் திட்டங்களை செயல்படுத்திய விதம், பார்க்க நன்றாக இருக்கிறது. இந்த போட்டியில் நாங்கள் பவர்பிளேவில் பந்துவீசிய விதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. அதேசமயம் இந்த விக்கெட் பேட்டிங் செய்வது எளிதாக இல்லை. அதனால் நாங்கள் 150-170 என்ற ரன்னில் எதிரணியை சுருட்ட நினைத்தோம்.
எதிர்பார்த்தை போலவே பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இதனால் அவர்கள் மீது எனக்கு நம்பிக்கை கிடைக்கிறது. அவர்கள் எந்த மேற்பரப்பு மற்றும் எந்த நிலையிலும் பந்து வீசத் தயாராக இருக்கிறார்கள், அது ஆச்சரியமாக இருக்கிறது, மேலும் எனக்கு நிறைய நம்பிக்கையைத் தருகிறது. மேற்கொண்டு பில் சால்ட் விளையாடும் விதம் அபாரமாக இருந்தது. அவருடன் இணைந்து விராட் கோலியும் ஸ்டிரைக்கை சுழற்றிய விதம் சிறப்பு வாய்ந்தது” என்று தெரிவித்துள்ளார்.
இப்போட்டி குறித்து பேசினால் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் 15 ரன்னிலும், ரியான் பராக் 30 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 75 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த துருவ் ஜூரெல் 35 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை மட்டுமே சேர்த்தது.
Also Read: Funding To Save Test Cricket
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணியில் பில் சால்ட் அதிரடியாக விளையாடி 65 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 62 ரன்களையும், தேவ்தத் படிக்கல் 5 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 40 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.