மகளிர் டி20 உலகக்கோப்பை: சூஸி பேட்ஸ் அதிரடியில் நியூசிலாந்து அபார வெற்றி!
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மகளிர் அணி, வங்கதேச மகளிர் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு பெர்னாடின் பெசுய்டன்ஹவுட் - சூஸி பேட்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் பெர்னாடின் 26 பந்துகளில் 44 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ஆனால் மறுமுனையில் தொடர்ந்து அதிரடி காட்டிய சூஸி பேட்ஸ் அரைசதம் கடந்து அசத்தினார்.
இதற்கிடையில் அமிலியா கெர், சோஃபி டிவைன் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய மேதி க்ரீன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 பந்துகளில் 44 ரன்களைச் சேர்த்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூஸி பேட்ஸ் 61 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 81 ரன்களைக் குவித்தார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியில் ஷமிமா சுல்தானா 11 ரன்களிலும், காதும் 30 ரன்களிலும், மொஸ்டரி 4 ரன்களிலும், கேப்டன் நிகர் சுல்தானா 8 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
பின் ஐந்தாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஷொர்மா அக்தர் 22 பந்துகளில் 31 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த வீராங்கனைகளும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்களை மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் இடன் கார்சன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் நியூசிலாந்து மகளிர் அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த சூஸி பேட்ஸ் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.