வரவிருக்கும் ஆட்டங்களில் நாங்கள் நம்பிக்கையுடன் செயல்படுவோம்- ருதுராஜ் கெய்க்வாட்!

Updated: Tue, Oct 03 2023 20:40 IST
Image Source: Google

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி நேபாள் அணிக்கு எதிரான காலிறுதிப்போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறக்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 49 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அசத்தினார். 

அதேபோல் இறுதிக்கட்டத்தில் ஃபினிஷர் ரிங்கு சிங் 15 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என்று அதிரடியாக 37 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். இதன் காரணமாகவே இந்திய அணி 200 ரன்களை கடந்தது. கடைசி ஓவரில் 25 ரன்கள் கிடைக்காமல் இருந்திருந்தால் இந்திய அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய சிக்கலாக மாறியிருக்கும். மேலும் இது காலிறுதி போட்டி என்பதால் இந்திய அணி தொடரை விட்டு வெளியேறி இருக்கும்.

இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திலக் வர்மா பத்து பந்துகளை எதிர்கொண்டு இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்தார். மேலும் கேப்டன் ருதுராஜ் மற்றும் ஜிதேஷ் ஷர்மா யாரும் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. சிவம் துபேவும் திணறவே செய்தார். இதைவிட முக்கியமாக எதிரில் விளையாடிய நேபாள் அணி அனுபவத்தில் மிகவும் சிறிய அணி. அதே சமயத்தில் மைதானத்தில் பவுண்டரி எல்லையும் சிறிதாக இருக்கிறது. 

இத்தனை சாதகங்கள் இருந்தும் வலிமையான இந்திய அணி செயல்பட்ட விதம் சரியான ஒன்றாக இல்லை. இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் “இங்கு எங்களுக்காக வந்த ஆதரவாளர்களுக்கு பெரிய நன்றி. இதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. இது எங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. ஆடுகளம் கொஞ்சம் சவாலாக இருந்தது. குறிப்பாக இந்த நிலைமை எங்களுக்கு பழக்கம் இல்லை. 

ஆனாலும் கூட எங்களுடைய முதல் போட்டிக்கு நாங்கள் ஓரளவுக்கு நிலைமைக்கு பழகி இருக்கிறோம் என்று நம்புகிறேன். இந்த அணியில் இருக்கக்கூடிய அனைவருமே கிரிக்கெட்டுக்காக இந்தியாவைப் பிரதிநிதித்துவப் படுத்தி உள்ள வீரர்கள். மேலும் அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். தற்போது வீரர்களின் ஃபார்ம் மற்றும் உடல் தகுதி இரண்டையும் கருத்தில் கொண்டு வரவிருக்கும் ஆட்டங்களில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை