வீரர்கள் விருப்பம் போல் விளையாட சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது - ரோஹித் சர்மா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க வீரரான ஷுப்மன் கில் சதமடித்து அசத்தியதுடன் 112 ரன்களைச் சேர்த்தார்.
அவருக்கு துணையாக விளையாடிய விராட் கோலி 52 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 78 ரன்களையும், கேஎல் ராகுல் 40 ரன்களையும் சேர்த்ததன் மூலம் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 356 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஆதில் ரஷித் 4 விக்கெட்டுகளையும், மார்க் வுட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியின் தொடக்கம் அபாரமாக இருந்தது.
அந்த அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் 34 ரன்களையும், பில் சால்ட் 23 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய வீரர்களில் டாம் பான்டன் 38 ரன்களையும், கஸ் அட்கின்சன் 38 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் இங்கிலாந்து அணி 214 ரன்களில் ஆல் அவுட்டானதுடன், 142 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதன்மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “தொடர் சென்ற விதத்தைப் பொறுத்தவரை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் இந்தத் தொடரில் நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்று தோன்றுகிறது. இருப்பினும் நாங்கள் மேம்படுத்தக்கூடிய சில விஷயங்களை சரிசெய்ய விரும்புகிறோம். நான் இங்கே நின்று அவற்றை விளக்கப் போவதில்லை.
Also Read: Funding To Save Test Cricket
அணிக்குள் சில நிலைத்தன்மையைக் காத்துக்கொள்வதும் எங்கள் வேலை. மேலும் எங்கள் அணியில் தகவல் தொடர்பு தெளிவாக உள்ளத. எந்தவொரு சாம்பியன் அணியும் ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாகச் செயல்பட்டு அங்கிருந்து முன்னேற விரும்பும், அதைதான் நாங்களும் செய்து வருகிறோம். மேலும் எங்கள் வீரர்கள் விருப்பம் போல் விளையாட சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை நாங்கள் தொடர்ந்து செய்ய விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.