அணியில் உள்ள அனைவரும் தங்கள் பொறுப்புகளை நன்கு அறிவார்கள் - ஹர்மன்ப்ரீத் கவுர்!

Updated: Sat, Feb 22 2025 09:36 IST
Image Source: Google

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களைச் சேர்த்தது.

அந்த அணியில் அதிரடியாக விளையாடிய எல்லிஸ் பெர்ரி 11 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் 86 ரன்களைச் சேர்த்தார். மும்பை அணி தரப்பில் அமஞ்சோத் கவுர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில் மூன்றாம் வரிசையில் களமிறங்கிய நாட் ஸ்கைவர் பிரண்ட் 42 ரன்களையும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 50 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர்.

இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அமஞ்ஜோத் கவுர் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 34 ரன்களையும், ஜி கமலினி 11 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு பந்து மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், “நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாட விரும்பினோம், ரசிகர்கள் ஒரு பெரிய பங்கை வகிக்கப் போகிறார்கள் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம், எனவே நாங்கள் ஒன்றாக இருக்க விரும்பினோம். மேலும் இங்கு பனியின் தாக்கும் இருக்கும் என்பதால் டாஸை வென்று நாங்கள் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தோம்.

அணியில் உள்ள அனைவரும் தங்கள் பொறுப்புகளை நன்கு அறிவார்கள், மேலும் போட்டிகளைப் பொறுத்து எப்போது பந்து வீசப் போகிறார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். இப்போட்டியின் 18ஆவது ஓவரின் போது அமஞ்ஜோத் கவுரிடன் இது தான் அவர்களின் முக்கிய பந்துவீச்சாளர், அதன்பின் அதன் பிறகு அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் யாரும் இல்லை. அதனால் நீ களத்தில் இருந்து பொறுமையாக விளையாடு என்று கூறினேன்.

Also Read: Funding To Save Test Cricket

அவர் ஒரு நல்ல வீராங்கனை என்பது எனக்கு தெரியும். ஆனால் இதுபோன்ற அழுத்தமான சூழலை அவர் இதுவரை எதிர்கொண்டது கிடையாது. ஆனாலும் அவர் திறமையாக செயல்பட்டு எங்களுக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட அமஞ்ஜோத் கவுர் ஆட்டநாயகி விருதை வென்றது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை