முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு; ஷஃபாலிக்கு இடமில்லை!
இந்திய மகளிர் அணி எதிர்வரும் இம்மாத இறுதியில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் ஏப்ரல் 27ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஒவ்வொரு அணியும் தலா 4 போட்டிகளில் விளையாடவுள்ளது. அதில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளன. இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை மகளிர் அணியை எதிர்த்து இந்திய மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இத்தொடரின் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் உள்ள ஆர் பிரமதோசா கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமே நடைபெறவுள்ளது.
இந்தாண்டு இந்தியாவில் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில், அத்தொடருக்கு தயாராகும் வகையில் இந்த முத்தரப்பு தொடரானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேற்கொண்டு கடந்த 2013ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில், இந்திய மகளிர் அணிக்கு இந்த முத்தரப்பு ஒருநாள் தொடர் முக்கியமானதாக கருதபடுகிறது.
இத்தொடருக்கான தென் ஆப்பிரிக்க மகளிர் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இத்தொடருக்கான இந்திய மகளிர் அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் தொடரும் நிலையில், துணைக்கேப்டனாக ஸ்மிருதி மந்தனா தொடர்கிறார். அதேசமயம் இத்தொடருக்கான இந்திய அணியிலும் நடத்திர வீராங்கனை ஷஃபாலி வர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
முன்னதாக நடந்து முடிந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரிலும் ஷஃபாலி வர்மா சிறப்பாக செயல்பட்ட நிலையிலும் அவருக்கு இந்த அணியில் இடம் கிடைக்காதது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. மேற்கொண்டு இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களான ரேணுகா சிங் தாக்கூர் மற்றும் டைட்டஸ் சாது ஆகியோரும் காயம் காரணமாக இந்த முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்கவில்லை.
இருப்பினும் நடந்து முடிந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காஷ்வி கௌதம், ஸ்ரீசாரனி ஆகியோரும், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட சுச்சி உபாத்யாய் ஆகிய அறிமுக வீராங்கனைகளுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து ஸ்னே ராணா, யாஸ்திகா பாட்டியா, அருந்ததி ரெட்டி மற்றும் அமன்ஜோத் கவுர் ஆகியோரும் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முத்தரப்பு தொடருக்கான இந்திய மகளிர் அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், யாஸ்திகா பாட்டியா, தீப்தி ஷர்மா, அமன்ஜோத் கவுர், காஷ்வீ கௌதம், சினே ராணா, அருந்ததி ரெட்டி, தேஜல் ஹசாப்னிஸ், ஸ்ரீ சரணி, சுசி உபாத்யாய்
Also Read: Funding To Save Test Cricket
மகளிர் ஒருநாள் முத்தரப்பு தொடர் அட்டவணை:
- ஏப்ரல் 27 - இலங்கை vs இந்தியா
- ஏப்ரல் 29 - இந்தியா vs தென் ஆப்பிரிக்கா
- மே 1 - இலங்கை vs தென் ஆப்பிரிக்கா
- மே 4 - இலங்கை vs இந்தியா
- மே 6 - தென் ஆப்பிரிக்கா vs இந்தியா
- மே 8 - இலங்கை vs தென்ஆப்பிரிக்கா
- மே 11- இறுதிப்போட்டி