விராட் கோலியைப் பார்த்து கில், ஸ்ரேயாஸ் கற்றுக்கொள்ள வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
நேற்று இந்திய அணி பேட்டிங் செய்வதற்கு சாதகமான புனே மைதானத்தில் எல்லா துறைகளிலும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி, வங்கதேச அணியை மிக எளிமையாக வீழ்த்தி இருக்கிறது. நேற்றைய போட்டியில் வங்கதேச தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். அந்தக் கட்டத்திலிருந்து பார்க்கும் பொழுது வங்கதேச அணி 300 ரன்கள் தாண்டும் என்பதாக இருந்தது.
ஆனால் குல்திப் யாதவ் முதல் விக்கெட்டை கைப்பற்றிய பிறகு, இந்திய அணியின் பௌலிங் யூனிட் அந்த விரிசலை பெரிய ஓட்டையாக மாற்றி, பங்களாதேஷ் அணியை 256 ரன்களுக்கு சுருட்டி விட்டார்கள். இந்த மைதானத்தில் இந்தியா மாதிரியான ஒரு அணியுடன் போட்டியிட வேண்டும் என்றால் இன்னும் நூறு ரன்கள் சேர்த்து எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
இதற்கடுத்து பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 48 ரன்கள் எடுத்தார். ஷுப்மன் கில் உலகக் கோப்பை தொடரில் தன்னுடைய முதல் அரை சதத்தை பதிவு செய்தார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் 19 பந்துகளில் ஆட்டம் இழந்தார். இவர்கள் இருவருமே மெஹதி ஹசன் மிராஸ் பந்துவீச்சை தாக்கி ஆட வேண்டும் என்று போய் வெட்கட்டை கொடுத்தார்கள்.
தற்பொழுது இவர்கள் இருவரின் பேட்டிங் அணுகுமுறை பற்றி பேசிய சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “ஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய பொறுமையை இழந்தார். அவர் 19 பந்துகளில் பேட்டிங் செய்து கொண்டிருந்த பொழுது, தனது விக்கெட்டை தூக்கி எறிந்தார். இதையேதான் ஷுப்மன் கில்லும் அதையே செய்தார். விராட் கோலியை பார்த்தால் அப்படி அவர் செய்ய மாட்டார்.
விராட் கோலி எப்போதாவதுதான் இப்படி ஆட்டம் இழப்பார். அவர் தன்னுடைய விக்கெட்டை பந்துவீச்சாளர்களைப் பெற வைக்கிறார். இதுதான் உங்களுக்கு தேவையான விஷயம். 70, 80 ரன்கள் அவர் இருந்த பொழுது சதம் அடிப்பதற்கு ஒரு வாய்ப்பு இருந்ததை உணர்ந்தார். ஏன் அடிக்க கூடாது? சதம் என்பது தினமும் வருவது கிடையாது.
சதம் அடிப்பது எப்படி என்று உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். கில் மற்றும் ஸ்ரேயாஸுக்கு இது முக்கியம். கில் குறைந்தபட்சம் சதங்கள் அடிக்கிறார். ஆனால் ஸ்ரேயாஸ் அப்படி கிடையாது. பேட்டிங் வரிசையில் நான்காம் இடத்தில் இப்படி ஒரு விக்கெட்டில், இப்படி ஒரு பந்துவீச்சு தாக்குதலுக்கு எதிராக கிடைத்த அருமையான வாய்ப்பை அவர் தூக்கி எறிந்து விட்டுப் போய்விட்டார்” என்று கடுமையாக சாடியுள்ளார்.