சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த திலக் வர்மா!

Updated: Sun, Jan 26 2025 08:59 IST
Image Source: Google

சென்னையில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்தை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியாவின் வெற்றியில் இளம் வீரர் திலக் வர்மா முக்கிய பங்கு வகித்தார். இப்போட்டியில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர், 4 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என72 ரன்களைச் சேர்த்து அசத்தியதுடன் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

இந்நிலையில் இப்போட்டியில் திலக் வர்மா 72 ரன்கள் எடுத்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த திலக் வர்மா, சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக ஆட்டமிழக்காமல் அதிக ரன்களை அடித்த வீரர் எனும் மார்க் சாப்மேனின் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார். 

முன்னதாக நியூசிலாந்து அணியின் மார்க் சாப்மேன் தொடர்ச்சியான போட்டிகளில் ஆட்டமிழக்காமல் 271 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்த நிலையில், திலக் வர்மா தனது கடைசி நான்கு இன்னிங்ஸ்களில் விக்கெட்டை இழக்காமல் 318 ரன்களைக் குவித்து புதிய சாதனை படைத்துள்ளார். இந்த பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர் (240), ஆரோன் பிஞ்ச் (240) மற்றும் டேவிட் வார்னர் (239) ஆகியோரும் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதேசமயம் இந்திய அணி தரப்பில் நான்கு இன்னிங்ஸ்களில் அதிக ரன்களை குவித்த வீரர் எனும் விராட் கோலியின் சாதனையையும் திலக் வர்மா முறியடித்துள்ளார். இதற்கு முன் விராட் கோலி நான்கு இன்னிங்ஸ்களில் 258 ரன்களை எடுத்த நிலையில், தற்போது திலக் வர்மா 300 ரன்களுக்கு மேல் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். இந்த பட்டியலில் சஞ்சு சாம்சன் (257), ரோஹித் சர்மா (253) மற்றும் ஷிகர் தவான் (252) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: Funding To Save Test Cricket

இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல் என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், திலக் வர்மாவின் அதிரடியால் இந்திய அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றிபெற்றது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை