ஐசிசி விதிகளை மீறியதாக டிம் டேவிட்டிற்கு அபராதம்!
ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 டி20 போட்டிகளிலும் வெற்றிபெற்றதுடன், 5-0 என்ற கணக்கில் விண்டீஸை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது.
இந்நிலையில் இத்தொடரின் போது ஆஸ்திரேலிய அணி வீரர் டிம் டேவிட் ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா இடையேயான 5வது டி20 போட்டியின் போது ஆஸ்திரேலியாவின் டிம் டேவிட் கள நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஆஸ்திரேலிய இன்னிங்ஸின் ஐந்தாவது ஓவரில் நடந்தது.
அப்போது வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப் லெக் திசையில் விசிய பந்திற்கு கள நடுவர் வைட் கொடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த டிம் டேவிட், தனது கைகளை விரித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கள நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு அல்லது அதிருப்தியை வெளிப்படுத்துவது ஐசிசி நடத்தை விதிகள் பிரிவு 2.8 படி குற்றமாகும்.
இதன் காரணமாக டிம் டேவிட்டிற்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 24 மாத காலத்தில் ஆஸ்திரேலிய வீரரின் முதல் குற்றம் இது என்பதால், டிம் டேவிட்டுக்கும் ஒரு தகுதி இழப்பு புள்ளியையும் ஐசிசி அபராதமாக விதித்துள்ளது. இதையடுத்து டிம் டேவிட் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், அபராதத்தையும் ஏற்றுக்கொண்டதால் மேற்கொண்டு விசாரணை தேவையில்லை என்பதை ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது.
Also Read: LIVE Cricket Score
ஐசிசி விதிகளின் படி, லெவல் 1 மீறல்களுக்கு குறைந்தபட்சம் அதிகாரப்பூர்வ கண்டனம் மற்றும் அதிகபட்சமாக ஒரு வீரரின் போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம், ஒன்று அல்லது இரண்டு தகுதியிழப்பு புள்ளிகள் விதிக்கப்படும். ஒரு வீரர் 24 மாத காலத்திற்குள் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட தகுதியிழப்பு புள்ளிகளைப் பெற்றால், அந்த வீரருக்கு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.