டிஎன்பிஎல் 2022: திருச்சி வாரியர்ஸை வீழ்த்தி கோவை கிங்ஸ் அசத்தல் வெற்றி!

Updated: Sun, Jul 10 2022 23:12 IST
Image Source: Google

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று இரவு 7.15 மணிக்கு தொடங்கி நடந்துவரும் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் ஆடிவருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கோவை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய திருச்சி வாரியர்ஸ் அணியில் சீனியர் வீரரான முரளி விஜயை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை.

சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் ஆட வந்துள்ள முரளி விஜய், இந்த டிஎன்பிஎல் சீசனில் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். அந்தவகையில், இந்த போட்டியில் திருச்சி அணியின் மற்ற வீரர்கள் சொதப்பிய போதிலும், அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார் முரளி விஜய்.

35 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 61 ரன்களை குவித்தார் முரளி விஜய். அவரைத்தவிர வேறு யாருமே சரியாக ஆடாததால் திருச்சி அணி 20 ஓவரில் 135 ரன்கள் மட்டுமே அடித்தது. 

இதையடுத்து 136 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய கோவை அணியில் சுரேஷ் குமார் 15 ரன்னிலும், கங்கா ஸ்ரீதர் ராஜூ 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சாய் சுதர்சனும் 27 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.

அதனைத்தொடர்ந்து வந்த ஷிஜித், முகிலேஷ் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் கேப்டன் ஷாரூக் கான் 24 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இதன்மூலம் லைகா கோவை கிங்ஸ் அணி 17 ஓவர்களில் இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை