ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசனானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 24ஆவது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய திண்டுக்கல் அணிக்கு விமல் குமார் மற்றும் ஷிவம் சிங் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் அதிரடியாக தொடங்கிய விமல் குமார் மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்கள் என 23 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். ஆனால் மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய ஷிவம் சிங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். ஆனால் மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய பாபா இந்திரஜித் 4 பவுண்டரிகளுடன் 29 ரன்களிலும், அடுத்து வந்த சரத் குமார் 3 பவுண்டரிகளுடன் 19 ரன்களிலும், கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 ரன்களிலும், பூபதி குமார் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
ஆனாலும் மறுமுனையில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷிவம் சிங் 56 பந்துகளில் சதமடித்து மிரட்டினார். மேலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷிவம் சிங் 6 பவுண்டரி, 10 சிக்ஸர்களுடன் 106 ரன்களையும், தினேஷ் ராஜ் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 13 ரன்களையும் சேர்க்க திண்டுக்கல் டிராகன்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்களைச் சேர்த்தது. மதுரை பாந்தர்ஸ் அணி தரப்பில் கார்த்திக் மணிகண்டன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மதுரை பாந்தர்ஸ் அணிக்கு சுரேஷ் லோகேஷ்வர் - கேப்டன் ஹரி நிஷாந்த் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சுரேஷ் லோகேஷ்வர் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த, மறுமுனையில் கேப்டன் ஹரி நிஷாந்த் 10 ரன்களுக்கும், அடுத்து வந்த ஜெகதீசன் கௌசிம் 28 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். அவர்களைத் தொடர்ந்து தொடக்க வீரராக களமிறங்கிய சுரேஷ் லோகேஷ்வர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்திய கையோடு 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 55 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சதுர்வேத் 18 ரன்களிலும், அக்ரம் கான் ஒரு ரன்னிலும், உத்திரசாமி சசிதேவ் 14 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து எமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் சரவணன் 22 ரன்களைச் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு அட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் மதுரை பாந்தர்ஸ் அணியானது 8 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியானது 30 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.