தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் 8ஆவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 2ஆவது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சேலத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து திண்டுக்கல் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதனையடுத்து களமிறங்கிய திண்டுகல் அணிக்கு ஷிவம் சிங் மற்றும் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய விமர் குமாரும் 9 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் ஷிவம் சிங்குடன் இணைந்த பாபா இந்திரஜித் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர்.
இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் சிங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பாபா இந்திரஜித் 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஷிவம் சிங்கும் 6 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 78 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் களமிறங்கிய வீரர்களு அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்ட, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பூபதி குமார் 23 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களைச் சேர்த்தது. திருச்சி அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கே ஈஸ்வரன் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.