தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு கேப்டன் அருண் கார்த்திக் - மோகித் ஹரிஹரன் இணை தொடக்கம் கொடுத்தனர்.இதில் ஹரிஹரன் ஒரு ரன்னுடன் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அஜிதேஷ் குருஸ்வாமியும் 5 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய நிதீஷ் ராஜகோபாலும் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டைழந்தார். அதன்பின் களமிறங்கிய ரித்திக் ஈஸ்வரன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபக்கம் அதிரடியாக விளையாடிய அருண் கார்த்திக் தேவைப்படு நேரங்களில் பவுண்டரி விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த கேப்டன் அருண் கார்த்திக் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் அவருக்கு துணையாக விளையாடி வந்த ரித்திக் ஈஸ்வரன் 29 ரன்களில் நடையைக் கட்டினார்.
அதன்பின் களமிறங்கிய சோனு யாதவ் அதிரடியாக விளையாடும் முயற்சியில் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டு 17 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் தொடர்ந்து அபாரமாக விளையாடிய அருண் கார்த்திக் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 84 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து ஹரிஷ் 3 ரன்களிளுக்கும், சிலம்பரசன் 4 ரன்களுக்கும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யபிரகாஷ் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களைக் குவித்தது. திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சரவண குமார் 4 விக்கெட்டுகளையும், அதிசயராஜ் டேவிட்சன் மற்றும் கேப்டன் அந்தோனி தாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிக்கு வசீம் அஹ்மத் - ராஜ்குமார் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர்.
இதில் ராஜ்குமார் 22 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அர்ஜுன் மூர்த்தியும் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீரரான வசீம் அஹ்மதும் 27 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஷ்யாம் சுந்தர் மற்றும் ஜாஃபர் ஜமால் இணையும் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டிற்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ஷ்யாம் சுந்தர் 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜாஃபர் ஜமாலும் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 39 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய சஞ்சய் யாதவும் 23 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ராஜ்குமார் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 31 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.