முத்தரப்பு ஒருநாள் தொடர்: ரிஸ்வான், சல்மான் சதம்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தயாராகும் வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதலிரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் மூன்றாவது போட்டியானது நேற்று (பிப்ரவரி 12) நடைபெற்றது. கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பாகிஸ்தானை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு டோனி டி ஸோர்ஸி மற்றும் கேப்டன் டெம்பா பவுமா இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் டோனி டி ஸோர்ஸி 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 22 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் பவுமாவுடன் இணைந்த இளம் வீரர் மேத்யூ பிரீட்ஸ்கி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.
இதில் இருவரும் இணைந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். மேலும் இருவரும் இணைந்து 120 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் இப்போட்டியில் சதமடிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டெம்பா பவுமா 13 பவுண்டரிகளுடன் 82 ரன்களை சேர்த்த நிலையில் ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஹென்ரிச் கிளாசெனும் அதிரடியாக விளையாடிய நிலையில், மறுபக்கம அபாரமாக விளையாடி வந்த பிரீட்ஸ்கியும் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 83 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வியான் முல்டரும் 2 ரன்னில் ஆட்டமிழக்க, இப்போட்டியில் அரைசதம் கடந்து அதிரடியாக விளையாடி வந்த ஹென்ரிச் கிளாசென் 11 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 87 ரன்களில் விக்கெட்டை இழந்து சதத்தை தவறவிட்டார். இறுதியில் கைல் வெர்ரைன் 42 ரன்களையும், கார்பின் போஷ் 15 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 352 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி 2 விக்கெட்டுகளையும், நசீம் ஷா, குஷ்தில் ஷா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஃபகர் ஸமான் மற்றும் பாபர் ஆசாம் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 57 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், பாபர் ஆசாம் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய சௌத் ஷகீலும் 15 ரன்களுடன் நடையைக் கட்ட, மற்றொரு தொடக்க வீரரான ஃபகர் ஸமான் 41 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் பாகிஸ்தான் அணி 91 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் சல்மான் ஆகா இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். ஒருகட்டத்திற்கு மேல் இருவரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. இதில் இருவரும் இணைந்து அபாரமாக விளையாடியதுடன் தங்கள் சதங்களையும் பதிவுசெய்து அசத்தியதுடன், 4ஆவது விக்கெட்டிற்கு 250 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 16 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 134 ரன்கள் எடுத்திருந்த சல்மான் ஆகா விக்கெட்டை இழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் முகமது ரிஸ்வான் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 122 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. மேற்கொண்டு இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த சல்மான் ஆகா ஆட்டநாயகன் விருதை வென்றார்.