அண்டர்19 வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் யு19 மற்றும் ஐக்கிய அரபு அமீரக யு19 அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு உஸ்மான் கான் மற்றும் ஷாசீப் கான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் உஸ்மான் கான் 41 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதைத்தொடர்ந்து ஷாசீப் கானுடன் இணைந்த முகமது ரியாஸுல்லாவும் அதிரடியாக விளையாட பாகிஸ்தான் அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. 

Advertisement

இப்போட்டியில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஷாசீப் கான் இத்தொடரில் தனது இரண்டாவது சதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். முன்னதாக இந்திய அணிக்கு எதிரான முதல் போட்டியிலும் ஷாசீப் கான் சதம்விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. பின் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஷாசீப் கான் 11 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 136 ரன்களைக் குவித்து தனது விக்கெட்டை இழந்தார். அதேசமயம் ரியாஸுல்லாவும் தனது சதத்தைப் பதிவுசெய்தார்.

இறுதியில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 106 ரன்களைச் சேர்த்து இன்னிங்ஸின் கடைசி பந்தில் ரியாஸுல்லா தனது விக்கெட்டை இழக்க, பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளி இழந்து 314 ரன்களைச் சேர்த்தது. யுஏஇ அணி தரப்பில் நூருல்லா அயோபி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய யுஏஇ அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை.

அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் யயின் ராய் 18 ரன்னிலும், ஆர்யன் சக்சேனா 24 ரன்னிலும், அக்‌ஷத் ராய் 5 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஈதன் டிசோசா - முகமது ரியான் கான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்ததுடன், 4ஆவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். 

பின் 50 ரன்கள் எடுத்த் நிலையில் முகம்து ரியான் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நூருல்லா அயோபி, அயான் அஃப்சல் கான் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் இப்போட்டியில் பொறுப்புடன் விளையாடி வந்த ஈதன் டிசோசா சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 11 பவுண்டரிகளுடன் 84 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அதன்பின் களமிறங்கிய வீரர்களாலும் பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத காரணத்தால், ஐக்கிய அரபு அமீரக அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்களை மட்டுமே சேர்த்தது. பாகிஸ்தான் தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அப்துல் சுபான் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் பாகிஸ்தான் யு19 அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் யுஏஇ யு19 அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News