மகளிர் யு19 உலகக்கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்திய இளம் படை!

Updated: Sun, Jan 29 2023 19:37 IST
Image Source: Google

மகளிருக்கான அண்டர்ன் 19 டி20 உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா அண்டர் 19 மகளிர் அணி, இங்கிலாந்து அண்டர் 19 மகளிர் அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. 

இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து வீராங்கனைகள் இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இறுதியில் 17.1 ஓவரில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மெக்டொனால்ட் 19 ரன்களை எடுத்திருந்தார். இந்திய அணி தரப்பில் டிடஸ் சது, அர்ச்சணா தேவி, பர்ஷவி சோப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து, 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஷஃபாலி வர்மா அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். பின் 15 ரன்கள் எடுத்திருந்த ஷஃபாலி வர்மா ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்வேதா செஹ்ராவத்தும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த சௌமியா திவாரி - கோங்காடி த்ரிஷா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தடுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் இருந்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.

இதன்மூலம் இந்திய அண்டர் 19 மகளிர் அணி 14 ஓவர்களில் இலக்கை எட்டி, இங்கிலாந்து அண்டர் 19 மகளிர் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதுடன், அண்டர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை