ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 9ஆவது இடத்திற்கான போட்டியில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து விளையாடியது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஆர்யான்ஷ் சர்மா - ஆசிஃப் கான் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடித்தள அமைத்தனர். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட இருவரும் அரைசதம் கடந்ததுடன், முதல் விக்கெட்டிற்கு 107 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். பின் 57 ரன்களுக்கு ஆர்யான்ஷ் சர்மா விக்கெட்டை இழந்தார்.

Advertisement

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் விருத்தியா அரவிந்த் 15 ரன்களுக்கும், ரோஹன் முஸ்தஃபா 17 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இருப்பினும் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆசிஃப் கான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 3ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

அவருக்கு துணையாக விளையாடிய பசில் ஹமீத் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 44 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆசிஃப் கான் 12 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 151 ரன்களைக் குவித்தார். இதன்மூலம் ஐக்கிய அரபு அமீரக அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்களைக் குவித்தது. 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய அமெரிக்க அணியில் தொடக்க வீரர்கள் சுஷாந்த் மதோனி, முக்கமல்லா ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த மொனான்க் படேல் - ஆரோன் ஜோன்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தனர். பின் 61 ரன்களில் மொனான்க் படேல் ஆட்டமிழக்க, 75 ரன்களை அடித்திருந்த ஆரோன் ஜோன்ஸும் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கஜானந்த் சிங்கும் அரைசதம் கடந்து 69 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

Advertisement

இறுதியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜஹாங்கீர் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுப்பார் என  எண்ணிய தருணத்தில் 32 ரன்களில் விக்கெட்டை இழக்க, அமெரிக்க அணியின் வெற்றியும் கேள்விக்குறியானது. இறுதியில் அமெரிக்க அணி வெற்றிபெற 2 ஓவர்களில் 20 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.  அதன்பின் பின் வரிசை வீரர்கள் தட்டுத்தடுமாறி ரன்களைச் சேர்க்க கடைசி பந்தில் அமெரிக்க அணி வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டதால் ஆட்டத்தின் பரப்பரப்பு அதிகரித்தது. 

சஞ்சித் சர்மா வீசிய அந்த பந்தில் அடிக்க முயன்ற அலி கான், விருத்தியா அரவிந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் அமெரிக்க அணியால் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 307 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இத்ன்மூலம் ஐக்கிய அரபு அமீரக அணி ஒரு ரன் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. 

 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News