BAN vs IND: இந்திய அணியிலிருந்து முகமது ஷமி விலகல்; மாற்று வீரராக உம்ரான் மாலிக் தேர்வு!
டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று முடிந்தப் பிறகு இந்திய சீனியர் வீரர்கள், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் பங்கேற்கவில்லை. இளம் இந்திய அணிதான் அங்கு சென்றிருந்தது.இந்நிலையில் ஓய்வில் இருந்த சீனியர் வீரர்கள் ரோஹித் ஷர்மா, விராட் கோலி போன்றவர்கள் தற்போது வங்கதேச தொடரில் விளையாட உள்ளனர்.
இரு அணிகளுக்கும் இடையில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. போட்டிகள் 4, 7, 10 ஆகிய தேதிகளில் துவங்கி நடைபெறும். இந்த ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி காலை 11:30 மணிக்கு துவங்கி நடைபெறும். இதனைத் தொடர்ந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. முதல் டெஸ்ட் 14-18 ஆகிய தேதிகளிலும், இரண்டாவது டெஸ்ட் டிசம்பர் 22-26 ஆகிய தேதிகளிலும் நடைபெறும். இந்த டெஸ்ட் போட்டிகள் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு துவங்கி நடைபெறும்.
வங்கதேச அணி தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் போன்ற அணிகளை அசால்ட்டாக வீழ்த்தியிருப்பதால், இந்தியாவுக்கு எதிராகவும் சவாலளிக்க கூடிய வகையில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வங்கதேச அணிக் கேப்டன் தமீம் இக்பால் திடீரென்று ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். இவருக்கு மாற்றாக தொடக்க லிடன் தாஸ் அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இந்திய அணியிலிருந்து சீனியர் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் காயம் காரணமாக விலகியுள்ளார். இந்நிலையில் இவருக்கான மாற்று வீரராக இளம் அதிவேக பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் சமீபத்திய நியூசிலாந்து தொடரில் இந்திய ஒருநாள் அணிக்காக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி: ரோஹித் ஷர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், ஷிகர் தவன், விராட் கோலி, ரஜத் படிதர், ஷ்ரேயஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பந்த், இஷான் கிஷன், ஷாபஸ் அகமது, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் , உம்ரான் மாலிக், முகமது சிராஜ், தீபக் சாஹர், குல்தீப் சென்.