ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸிஸ் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்தவகையில் வங்கதேச அணியும் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று ஹஸ்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் - சௌமீயா சர்கார் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 34 ரன்கள் சேர்த்த நிலையில் 14 ரன்களை எடுத்திருந்த லிட்டன் தாஸ் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த சௌமீயா சர்காரும் 20 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 3 ரன்களிலும், ஷாகிப் அல் ஹசன் 6 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வங்கதேச அணி 64 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Advertisement

அதன்பின் ஜோடி சேர்ந்த தாவ்ஹித் ஹிரிடோய் - மஹ்முதுல்லா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபாரமாக விளையாடிய தாவ்ஹித் ஹிரிடோய் தனது அரைசதத்தைக் கடந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து 5ஆவது விக்கெட்டிற்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.  அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மஹ்முதுல்லா 33 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய ஜகார் அலி தனது பங்கிற்கு இரண்டு பவுண்டரிகளை விளாசினார். 

மறுபக்கம் இறுதிவரை களத்தில் இருத தாவ்ஹித் ஹிரிடோய் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 58 ரன்களை எடுத்திருந்த நிலையில் கடைசி பந்தில் விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களைச் சேர்த்துள்ளது. அமெரிக்க அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஸ்டீவன் டெய்லர் 9 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News