அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முடிந்த முதலாவது டி20 போட்டியில் அமெரிக்க அணி வெற்றிபெற்று அசத்தியதுடன், வங்கதேச அணிக்கு எதிராக தங்கள் முதல் முயற்சியிலேயே வெற்றி கண்டு சாதனையும் படைத்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது.
ஹஸ்டனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அமெரிக்க அணிக்கு ஸ்டீவன் டெய்லர் மற்றும் கேப்டன் மோனாங்க் படேல் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர்.
இதில் அதிரடியாக விளையாடிய ஸ்டிவன் டெய்லர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 31 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஆண்ட்ரிஸ் கஸும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஆரோன் ஜோன்ஸ் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
அதன்பின் 35 ரன்கள் சேர்த்த நிலையில் ஆரோன் ஜோன்ஸ் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கோரி ஆண்டர்சனும் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதத்தை நெருங்கிய கேப்டன் மோனாங்க் படேல் 42 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களாலும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியவில்லை.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் அமெரிக்க அணியானது 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை மட்டுமே சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷொரிஃபுல் ஹசன், முஸ்தஃபிசூர் ரஹ்மான் மற்றும் ரிஹாத் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியில் சௌமீயா சர்க்கார் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.
பின்னர் இணைந்த தன்ஸித் ஹசன் - கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் தன்ஸித் ஹசன் 19 ரன்களிலும், நஜ்முல் ஹொசைன் 36 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த தாவ்ஹித் ஹிரிடோய் - ஷாகிப் அல் ஹசன் இணை அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர்.
பின்னர் தாவ்ஹித் 25 ரன்களிலும், ஷாகிப் அல் ஹசன் 30 ரன்களிலும் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் வங்கதேச அணியானது 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அமெரிக்க அணி தரப்பில் அலி கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன்மூலம் அமெரிக்க அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரை அமெரிக்க அணி 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.